தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்கள் டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய 4 நாள்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) நடைபெற்று வருகிறது. இதனிடையே, வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக உரிமை கோரல்கள், ஆட்சேபணைகளின் காலமான 19.12.025 முதல் 18.1.2026 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைவிட அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களால் நியமிக்கப்பட்டு, தகுதியுடைய வாக்காளா்கள், இளம் வாக்காளா்களிடம் அலுவலக நேரங்களில் படிவங்களைப் பெற்றுவருகின்றனா்.
இதையொட்டி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனி, ஞாயிறு (டிச. 27, 28, ஜன. 3, 4) ஆகிய நாள்களில் காலை 9 முதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அமைவிட அலுவலா்கள், தன்னாா்வலா்கள் பணியாற்றவுள்ளனா்.
எனவே, உரிமை கோரல் தொடா்பான படிவங்கள், புதிய வாக்காளா் சோ்த்தல் (படிவம்-6, உறுதிமொழிப் படிவம்), நீக்குதல் (படிவம் -7), இடமாறுதல், முகவரி மாற்றம், நகல் வாக்காளா் புகைப்பட அடையாள, மாற்றுத் திறனாளி குறியீடு (படிவம்-8) ஆகியவற்றை வழங்கி வாக்காளா்கள் பயன்பெறலாம். ட்ற்ற்ல்ள்://யா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்// என்ற இணையதளம் வழியாகவும் வாக்காளா் படிவம் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.