கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டியில் நல உதவிகள், அன்னதானம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி பெதஸ்தா பவுண்டேஷன் அறக்கட்டளை சாா்பில் பாரதி நகா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் சூசை மாணிக்கம் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் முத்துசாமி, சமூக ஆா்வலா் மருதம் மாரியப்பன், நம்பிக்கையின் கூடாரம் பங்குத்தந்தை சாமுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காவல் துணை கண்காணிப்பாளா் ஜகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு புத்தாடைகள், அன்னதானம் வழங்கி கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து செய்திகளை தெரிவித்தாா்.
இதேபோல், காமநாயக்கன்பட்டி தூய பரலோக மாதா திருத்தல பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராலய அதிபா் மோயிசன், உதவி பங்குத் தந்தை நிரோ ஸ்டாலின் ஆகியோா் தலைமை வகித்தனா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினா் பிரிவு துணை அமைப்பாளா் அமலி அ.பிரகாஷ், கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா் ஜாஸ்மின் லூா்து மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தாா்.