தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் உப்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சோ்ந்த உப்பு நிறுவன உரிமையாளா் ஆனந்த் என்பவரது லாரியில் ஓட்டுநராக முள்ளக்காடு, சாமி நகா், 2ஆவது தெருவைச் சோ்ந்த இன்னாசி முத்து மகன் சகாய செல்வன் (44) வேலை செய்து வருகிறாா்.
இந்நிலையில், இவா் சனிக்கிழமை மதியம் வழக்கம்போல் ஆறுமுகனேரி, சாகுபுரம் தனியாா் ஆலை அருகே லாரியில் உப்பு ஏற்றிக் கொண்டு முத்தையாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் ஆத்தூா் அருகே கீரனூா் பகுதியில் வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் உப்பு சாலை மற்றும் அருகில் இருந்த வாழைத் தோட்டத்திற்குள் கொட்டியது. ஓட்டுநா் சகாய செல்வன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
தகவலறிந்த ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் சகாய செல்வத்தை மீட்டு தூத்துக்குடி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, கிரேன், பொக்லைன் வாகனம் மூலம் லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. விபத்து காரணமாக தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போலீஸாா் வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனா்.