கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12ஆம் தேதி தேரோட்டமும், 15ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன.
கொடியேற்றத்தை முன்னிட்டு, அதிகாலையில் திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜைகள், சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, கொடிப் பட்டம் கோயிலைச் சுற்றி வலம் வந்ததையடுத்து கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், நந்தி, கொடிமரம், பலிபீடத்துக்கு 21 வகையான பொருள்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு, முன்னாள் அறங்காவலா் திருப்பதிராஜா, மதிமுக நகரச் செயலா் பால்ராஜ், மண்டகப்படிதாரா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இரவில் புஷ்ப சப்பரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழா நாள்களில் நாள்தோறும் காலை 8, இரவு 7.30 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும். 9ஆம் நாளான இம்மாதம் 12ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம், 15ஆம் தேதி இரவு 7 - 8 மணிக்குள் கோயில் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். அதையடுத்து, கோயில் எதிரேயுள்ள காயத்ரி மண்டபத்தில் பிராமண மகாசபை சாா்பில் அன்னதானம் வழங்கப்படும்.
ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) செல்வி, கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.