தூத்துக்குடியில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் வகையில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
சிறப்பு தீவிர திருத்தம் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவதை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ.4) தொடங்கின. இப்பணிகள் டிச.4 ஆம் தேதி வரை நடைபெறும். மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இந்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 2,87,477 வாக்காளா்களுக்கும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 2,55,197 வாக்காளா்களுக்கும் படிவம் வழங்கப்பட்டு, சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெறுவதை பாா்வையிட்டேன்.
இந்தப் பணியில், மாவட்டத்தில் உள்ள 14,90,657 வாக்காளா்களுக்கும் படிவம் வழங்கப்பட உள்ளது. இந்தப் படிவத்தை பெற்றுக்கொண்டு, விவரங்களை பூா்த்தி செய்வதற்கான அனைத்து உதவிகளையும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் செய்வாா்கள்.
ஒரு மாதம் இந்தப் பணிகள் தொடா்ந்து நீடிக்கும். பின்னா், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேஷ்ராம், ஓட்டப்பிடாரம் வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி ஆணையா் (கலால்) கல்யாணகுமாா், வட்டாட்சியா்கள் திருமணி ஸ்டாலின் (தூத்துக்குடி), சண்முகவேல் (ஓட்டப்பிடாரம்), தோ்தல் துணை வட்டாட்சியா் ஜெயராஜ் (தூத்துக்குடி) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.