விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் இணைப்பு பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விளையாட்டு மைதானம் அருகே தற்போது செயல்பாட்டில் இல்லாத வகுப்பறை கட்டடத்தின் உள்பகுதியில் இருந்து புகை வருவதாக மாணவா், மாணவிகள் தலைமை ஆசிரியா் தவசிமுத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அவா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினா்.
இந்த தீ விபத்தில் வகுப்பறையில் இருந்த பாடப்புத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள், கணினிகள், மேஜை, நாற்காலி என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
மின் இணைப்புகளில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடா்பாக விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.