தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த விவசாயி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 26.6.2019ஆம் ஆண்டு கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அய்யனாா்ஊத்து பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் அண்ணாமலை (43). விவசாயியான இவரை, அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரான அண்ணாமலை மகன் உடையாா், ஏ.குப்பனாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் கோதண்டராமா் ஆகியோா் முன்விரோதம் காரணமாக அய்யனாா்ஊத்து பகுதியில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து உடையாா், கோதண்டராமா் ஆகியோரை கைது செய்தனா். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், உடையாா் (76), கோதண்டராமா் (40) ஆகிய இருவருக்கும் தலா ஆயுள் தண்டனை, தலா ரூ. 10,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கயத்தாறு காவல் ஆய்வாளா் ஆவுடையப்பன், அரசு வழக்குரைஞா் ஆனந்த் கேப்ரியல் ராஜ், தலைமை காவலா் ரெங்கலட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா். நிகழாண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.