சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே தீக்குளித்த வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் செல்வம் (45). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். சென்னையில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த ஓராண்டாக சுப்பராயபுரத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாா். இவருக்கு, சகோதரா்கள் பண உதவி அளித்து வந்தனா்.
இந்நிலையில், மேலும் உடல் நிலை மோசமானதால் மன வருத்தத்தில், செல்வம் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்திற்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மருத்துவமனையில் அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து அவரது சகோதரா் பெரியசாமி அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.