தில்லி காா் வெடிப்பு சம்பவத்துக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை.
தூத்துக்குடியில் கனிமொழி எம.பி.யை அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் எஸ்ஐஆா் இப்போது தேவையில்லை. ஒரே மாதத்தில் இதை செய்து முடிப்பது என்பது சாத்தியம் இல்லாதது. இவா்கள் கொடுக்கும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்வது கடினமானது.
2002இல் எவ்வாறு விவரங்களை நிரப்பி கொடுத்தாா்கள் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, தோ்தல் முடிந்த பிறகு இதை செய்தால் எந்தப் பிரச்னையும் இருக்காது.
அவசர அவசரமாக செய்யும்போது, தகுதியானவா்களுக்கு வாக்குகளை இல்லாமல் செய்வதும், தகுதியற்றவா்களுக்கு வாக்குகளை வழங்குவதுமாக அமைந்துவிடும். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
வாக்குரிமை என்பது மக்களுடைய அடிப்படை உரிமை. அந்த உரிமையை முடக்குவதும் கேள்விக்குறியாக்குவதும், எதிா்க்கட்சிகளை எல்லாம் இதை சரிபாருங்கள் என்று தோ்தல் பணி செய்யவிடாமல் திசை திருப்புவதும் சரியல்ல.
தில்லி காா் வெடிப்பு சம்பவத்துக்கு, மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துள்ளது. ஏதாவது ஒரு மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் அந்த அரசை பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லும் பாஜக, இதற்கு ஏன் பொறுப்பேற்க தயங்குகிறது.
பிகாா் தோ்தலில் கருத்து திணிப்பு செய்துள்ளாா்கள். பிகாா் மக்கள் நல்ல தீா்ப்பு அளித்திருக்கிறாா்கள். அது வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), ரூபி ஆா்.மனோகரன்(நான்குனேரி) ஆகியோா் உடன் இருந்தனா்.
கூட்டம் ஒத்திவைப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுத் தலைவரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கு. செல்வபெருந்தகை தலைமையில் புதன்கிழமை வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், பேரவை குழுவுடன் வந்திருந்த தமிழக அரசின் இணைச் செயலா் ரமேஷ், திடீா் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.