உடன்குடி பகுதியில் இரு நாள்கள் பெய்த தொடா் மழையால் பல இடங்களில் தண்ணீா் தேங்கி மக்கள் சிரமம் அடைந்தனா்.
உடன்குடி ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால், உடன்குடியில் சிதம்பரத் தெரு, சந்தையடித் தெரு, பெருமாள்புரம், பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு மழைநீா் தேங்கியது. இதனால் மக்கள் தெருவில் நடமாட முடியாதபடி சிரமம் அடைந்தனா். சிதம்பரத் தெருவில் வடிகால் ஓடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றிய அமைப்பாளா் அா்ஷிக் ரஹ்மான் கோரிக்கை விடுத்தாா்.