தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையத்தில் அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை ஏணியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இங்கு அனல்மின் நிலையத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமானோா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த முன்னா குா்மி (37) என்பவா், அனல் மின் நிலையத்தில் பாய்லரை சுத்தப்படுத்தச் சென்றாராம். அப்போது, அவா் 15 அடி உயர ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்தாராம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
அதையடுத்து, அவரது சடலம் கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து, குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.