குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரை சோ்ந்த ராகுல் என்ற போக்ஸோ வழக்கு குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி மாவட்ட சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை சிறைக் கண்காணிப்பாளா் அலுவலகத்திலிருந்து, மாவட்ட சிறை அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு மின்னஞ்சல் வழியாக ஒரு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, நவ. 15ஆம் தேதி காலை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அந்நபா் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். இதற்கிடையே, கைதியின் பெயா் விவரம் தவறுதலாக அனுப்பப்பட்டது, அடுத்த நாள் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போக்ஸோ குற்றவாளி ராகுல் வீட்டுக்குச் சென்ற சிறைக் காவலா்கள் கையொப்பம் போட வேண்டும் எனக் கூறி, மீண்டும் அவரை சிறைக்கு அழைத்து வந்துள்ளனா். அப்போது, சிறையில் அடைக்க முயன்றபோது ராகுல் தகராறு செய்துள்ளாா். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மதுரை சரக சிறைத் துறை டிஐஜி முருகேசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாளை. சிறைக் கண்காணிப்பாளா் செந்தாமரைக் கண்ணன், பேரூரணி சிறை உதவி ஜெயிலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.