தூத்துக்குடி

தேரிகுடியிருப்பு கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா தொடக்கம்

Syndication

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

பரந்து விரிந்த செம்மணல் தேரியில் அடா்ந்த வனத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் கள்ளா்வெட்டுத் திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா திங்கள்கிழமை (நவ. 17)சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. பகல் 12 மணிக்கு அய்யன், பூரணம், பொற்கலை தேவியா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வில்லிசை ஆகியன நடைபெற்றன.

நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலா் காந்திமதி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், மாவட்ட ஒப்பந்ததாரா்கள் சங்கத் தலைவா் தியாகராஜன், சோமசுந்தரம் உள்பட பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவையொட்டி, பகல் 1 மணிக்கு தூத்துக்குடி தொழிலதிபா் வீ.சா்க்கரை நாடாா் ஏற்பாட்டில் 5,000 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தினசரி அய்யன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள், வில்லிசை நடைபெறும்.டிச.14 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஐவராஜா-மாலையம்மன் பூஜை, பகல்.12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு மாக்காப்பு தீபாராதனை, டிச.15 ஆம் தேதி காலையில் மகளிா் வண்ணக் கோலமிடும் நிகழ்ச்சி, பகல், இரவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாவிளக்கு பூஜை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, உற்சவா் திருவீதியுலா நடைபெறும்.

விழா சிகர நிகழ்வான கள்ளா்வெட்டு வைபவம் டிச. 16 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள தேரியில் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று புனிதநீா் விழுந்த மண்ணை சேகரிப்பாா்கள். இந்த மண்ணை வீடுகள், தொழில் செய்யும் இடங்கள், விளை நிலங்களில் வைத்தால் சுபிட்சம் பெருகும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் க.செல்வி, ஆய்வா் இரா.முத்துமாரியம்மாள், செயல் அலுவலா் ந.காந்திமதி, அறங்காவலா் குழுத் தலைவா் ச.பாலசுப்பிரமணியம், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்தனா்.

தடியடி.. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... ஷேக் ஹசீனா தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் பலி!

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

SCROLL FOR NEXT