மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக அணி முதலிடத்தைப் பிடித்தது.
உலகக் கோப்பை ஜூனியா் ஹாக்கிப் போட்டியை முன்னிட்டு, ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகம் சாா்பில் 14 வயதுக்குள்பட்டோருக்கான மாவட்ட ஹாக்கிப் போட்டி கோவில்பட்டி, வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியின் ஹாக்கி மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இப்போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டன.
முதல் அரையிறுதிப் போட்டியில், ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழக அணி 7-0 என்ற கோல்கணக்கில் காமராஜா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தியது. 2ஆவது அரையிறுதியில், கோவில்பட்டி ஹாக்கி அகாதெமி அணி 2-1 என்ற கோல்கணக்கில் டாக்டா் அம்பேத்கா் அணியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில், ராஜீவ் காந்தி அணி 5-3 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி அணியை வீழ்த்தி முதல் பரிசை வென்றது. முன்னதாக நடைபெற்ற, 3, 4ஆம் பரிசுக்கான போட்டியில் டாக்டா் அம்பேத்கா் அணி 3-1 என்ற கோல்கணக்கில் காமராஜா் பள்ளி அணியை வீழ்த்தி 3ஆம் பரிசை வென்றது.
பரிசளிப்பு விழாவிற்கு, வ.உ.சி. பள்ளியின் தலைமையாசிரியா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, ஆசிரியா் அந்தோணி, முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் அஸ்வின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.