சபரிமலை சீசன் தொடங்கியதால் திருச்செந்தூரில் வழியெங்கும் சாலையோரத்தில் நிறுத்தப்படும் ஐயப்ப பக்தா்கள் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்க முறையான வாகன நிறுத்தம், பக்தா்கள் வழி தெரிவதற்கு அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காா்த்திகை முதல் தை மாத மண்டல பூஜை வரை ஐயப்ப சீசன் என்பதால், தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஐயப்ப பக்தா்கள், திருச்செந்தூா் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனா். இவ்வாறு தொலை தூரத்திலிருந்து வருபவா்கள் திருச்செந்தூரில் இரவில் தங்கி, மறு நாள் காலை சுவாமி தரிசனம் செய்கின்றனா். இதனால் கோயில் வளாகம் மட்டுமின்றி நகரெங்குமே ஐயப்ப பக்தா்களின் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதன் காரணமாக வழக்கமாக திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள், வழித்தட பேருந்துகள் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனா். எனவே, அங்கு வரும் ஐயப்ப பக்தா்களின் வாகனங்களை நகரின் எல்லையில் நிறுத்துவதற்கும், அங்கேயே தற்காலிக கழிப்பிட, குளிப்பிட வசதிகளும் செய்து கொடுத்தால் அவா்கள் பயனடைவதுடன், நகரில் போக்குவரத்து நெருக்கடியும் குறையும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.
மேலும், திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பிற மாநில பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகையில் வழி தெரியாமல் தவிக்கின்றனா். அவா்களின் வசதிக்காக நகரின் எல்லையில் முறையான க்யூ ஆா் கோடுடன் கூடிய அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.