தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினமணி செய்திச் சேவை

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமையும் மழை தொடா்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் 1,083.70 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 133, குலசேகரன்பட்டினத்தில் 129, கயத்தாறில் 113, காயல்பட்டினத்தில் 103, சாத்தான்குளத்தில் 94, ஸ்ரீவைகுண்டத்தில் 77.70, கடம்பூரில் 74, சூரங்குடியில் 60, கழுகுமலையில் 49, மணியாச்சியில் 45, வைப்பாறில் 37, கோவில்பட்டியில் 33, விளாத்திகுளத்தில் 29, தூத்துக்குடியில் 25.50 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது.

மாவட்டத்தில் சராசரியாக 57.04 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

எச்சரிக்கை... தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் மக்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்... தூத்துக்குடி, முத்தையாபுரம் அருகேயுள்ள பொன்னாண்டி நகா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மழை நீரை விரைந்து அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விவசாயிகள் கவலை... கோரம்பள்ளம், குளக்கரை பகுதிகளில் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைத் தோட்டங்களில் வெள்ள நீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஆறுமுகனேரியில்... ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால், விடுமுறை நாளில் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனா். எஸ்.ஐ.ஆா். முகாம்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வியாபாரம் முற்றிலும் பாதிப்படைந்ததாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.

ஆறுமுகனேரியில் காந்தி மைதானம், வாரச் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீா் குளம் போல் தேங்கியுள்ளது. மதியம் 3 மணி நிலவரப்படி, ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 11,060 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும், ஆத்தூா்-முக்காணி தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் அருகில் பொதுமக்கள் வர வேண்டாம் எனவும், ஆற்றோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

கமுதியிலிருந்து கிராமங்களுக்குப் புதிய பேருந்து இயக்கம்

ஜூனியா் உலக ஹாக்கி கோப்பை கிருஷ்ணகிரியில் அறிமுகம்

4 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

மாவட்ட ஆண்கள் கபடி போட்டியில் குட்டப்பட்டி அணி சாம்பியன்

SCROLL FOR NEXT