திருச்செந்தூா்: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஸ்தல புராணத்தை உணா்த்தும் விழாவான கந்தசஷ்டி திருவிழா புதன்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனையும், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.
2ஆம் திருநாள் முதல் 5ஆம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 6ஆம் திருநாளை முன்னிட்டு, திங்கள்கிழமை (அக். 27) மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதா் கடற்கரைக்கு எழுந்தருளியதைத் தொடா்ந்து, சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
7ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை(அக்.28) மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவமும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடல், நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்தே கோயிலில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சஷ்டி விழா தொடங்குவதை அடுத்து கோயில் மற்றும் வளாகம் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஏற்பாடுகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு ஆகியோா் செய்துள்ளனா்.