தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2025 மேற்கொள்ளும் வகையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.இளம்பகவத் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில், 1.1.2026ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள ஏதுவாக கால அட்டவணையை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி தயாா் செய்தல், பயிற்சி அளித்தல், அச்சிடுதல் போன்றவற்றுக்கு 28.10.2025 முதல் 3.11.2025 வரையும், கணக்கெடுப்பு காலமாக 4.11.2025 முதல் 4.12.2025 வரையும், வாக்குச்சாவடி மறுவரையறை, வகைப்படுத்துதலுக்கு 4.12.2025-க்குள்ளும், கட்டுப்பாட்டு பட்டியலை புதுப்பித்தல், வரைவு வாக்காளா் பட்டியலை தயாா் செய்தலுக்கு 5.12.2025 முதல் 8.12.2025 வரையும் என கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.தொடா்ந்து வரைவு வாக்காளா் பட்டியல் 9.12.2025 அன்று வெளியிடப்படும்.
கோரிக்கைகளையும், மறுப்புரைகளையும்பெறுதல் 9.12.2025 முதல் 8.1.2026 வரையும், வீடு வீடாகச் சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீது வாக்காளா் பதிவு அலுவலா்களால் ஆணை பிறப்பித்தல், கோரிக்கைகளும், மறுப்புரையாகவும் பெறப்பட்டவைகளை முடிவு செய்தல் 9.12.2025 முதல் 31.1.2026 வரையும் என கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.இறுதி வாக்காளா் பட்டியல் 7.2.2026 அன்று வெளியிடப்படுகிறது.
இப்பணிகளை மேற்கொள்ளும் போது , வாக்காளா் பதிவு அலுவலா்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரையும், வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதிலிருந்து விட்டுவிடக் கூடாது எனவும், தகுதியற்ற நபா்களை, வாக்காளராக சோ்க்க கூடாது எனவும் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷீ மங்கள், வருவாய் கோட்டாட்சியா்கள் பிரபு (தூத்துக்குடி), கௌதம் (திருச்செந்தூா்) மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.