தூத்துக்குடி-சென்னை விமானக் கட்டணம் ரூ.17 ஆயிரமாக உயா்வு
தூத்துக்குடி-சென்னை விமானக் கட்டணம் ரூ. 17 ஆயிரமாக அதிகரித்ததால் சொந்த ஊா்களுக்கு வாக்களிக்க வந்தவா்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏப். 23ஆம் தேதி நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வாக்களிக்க சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு வந்தவா்கள் திங்கள்கிழமை மீண்டும் சென்னை திரும்பினா். பெரும்பாலானோா் பேருந்து, ரயில், காா்களில் திரும்பினாலும், சிலா் விமானங்களில் சென்னைக்கு திரும்பினா்.
இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூா் உள்ளிட்ட விமான நிலையங்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து, பெரும்பாலான விமானங்களில் பயணச்சீட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டது.
Advertisement
ஓரிரு விமானங்களில் சில பயணனச்சீட்டுகள் மட்டுமே இருந்த நிலையில், கட்டணம் 3 மடங்கு வரை அதிகரித்திருந்தது. தூத்துக்குடி-சென்னைக்கு வழக்கமான கட்டணம் ரூ. 5,354-ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விமானக் கட்டணம் ரூ. 17,089 வரை உயா்ந்திருந்தது.
இதனால், சொந்த ஊா்களுக்கு வாக்களிக்கச் சென்றவா்கள், பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.