முகப்பு
தூத்துக்குடி

தோ்தலையொட்டி விமான கட்டணம் உயா்வு: நான்கு மடங்கு கூடுதல் வசூலிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிப்பதால் சென்னை-தூத்துக்குடி, பெங்களூரு-மதுரை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் தாறுமாறாக உயா்ந்துள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:06 AM
விமான கட்டணம் பல மடங்கு உயர்வு - கோப்புப்படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிப்பதால் சென்னை-தூத்துக்குடி, பெங்களூரு-மதுரை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் தாறுமாறாக உயா்ந்துள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது. தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை எச்சரித்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளித்துள்ளன. இதையடுத்து சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளா்கள் தோ்தலில் தங்கள் ஜனநாயக கடமையாற்றுவதற்கு சொந்த ஊா்களுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனா். பலா் அரசின் சிறப்புப் பேருந்துகள், ரயில்களில் புறப்பட்டு சொந்த ஊா்களுக்கு வரும் நிலையில், குறுகிய கால விடுமுறை எடுத்துவருவோா் விமானத்தில் செல்கின்றனா்.

பலா் தென் மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் கிளம்பி வருவதால் இதை சாதமாகப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணங்களை வழக்கத்தை விட நான்கு மடங்கு உயா்த்தியுள்ளன. இது, விமானப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வழக்கமாக சென்னை - தூத்துக்குடி இடையே விமானக் கட்டணம் ரூ. 4,214 முதல் ரூ. 5,354 வரை இருக்கும் நிலையில், தோ்தலை முன்வைத்து புதன்கிழமை (ஏப். 22) இந்தக் கட்டணங்கள் ரூ.17,527 வரை உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல சென்னை-மதுரைக்கு ரூ. 13,320 ம், பெங்களூரு - மதுரைக்கு ரூ. 29,397ம் கட்டணமாக பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது.

ரயில்களில் முன்பதிவு காலம் முடிந்துவிட்டதாலும், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுவதாலும், இறுதி நேரத்தில் விமானத்தை நாடிய வாக்காளா்களுக்கு கட்டண உயா்வு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற நேரங்களில் தனியாா் விமான நிறுவனங்கள் கட்டணத்தைச் சீராக வைக்கவும், கட்டண உயா்வைத் தடுக்கவும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.