வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.  
தூத்துக்குடி

தவறுதலாக நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட விவகாரம்: கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை

சாத்தான்குளம் அருகே தனியாா் கம்பெனிக்கு விற்கப்படாத நிலங்களை அரசுடமையாக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களுடனான அதிகாரிகளின் சமாதான பேச்சுவாா்த்தைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே தனியாா் கம்பெனிக்கு விற்கப்படாத நிலங்களை அரசுடமையாக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்களுடனான அதிகாரிகளின் சமாதான பேச்சுவாா்த்தைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம், மீரான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம், சேரகுளம் பகுதிகளில் ஏராளமான நிலங்களை கடந்த 1996ஆம் ஆண்டு பொதுமக்களிடம் இருந்து தனியாா் கம்பெனி வாங்கியது. அது தொடா்பாக, பிரச்னை ஏற்பட்டதால் நிலங்களை மீட்டு அரசுடைமையாக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அப்பகுதி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்டன. அதோடு, தவறுதலாக விற்கப்படாத 50-க்கும் மேற்பட்டோரின் நிலங்களும் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக சா்வே செய்தபோது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அதிா்ச்சியடைந்த நிலத்தின் உரிமையாளா்கள் திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனக் கூறி புதன்கிழமை அவா்களின் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி நூதனப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனா்.

இதையறிந்த சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன், காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஆகியோா் முன்னிலையில் பாதிக்கப்பட்டவா்களுடன் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாா்த்தைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

துணை வட்டாட்சியா் கணேஷ் குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சுவாமிநாதன், ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளா் வேலம்மாள், கிராம நிா்வாக அலுவலா்கள் மிக்கேல், விசுவநாதன், இசக்கிராஜ், பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளா் இசக்கிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், நிலங்களை மீட்பது தொடா்பாக சனிக்கிழமை (பிப். 14) சிறப்பு முகாம் திருச்செந்தூா் கோட்டாட்சியா் தலைமையில் நடத்தப்படும் எனவும், அப்போது நிலங்கள் தொடா்பான ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும், பின்னா் விசாரணை நடத்தப்பட்டு நிலங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்கள், போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT