தூத்துக்குடி, டூவிபுரம், 5ஆவது தெருவில் அதிமுக மாநில வா்த்தகரணி அலுவலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்து, அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். பின்னா், கட்சிக் கொடியேற்றிவிட்டு, செய்தியாளா்களைச் சந்தித்து அவா் கூறியது:
வரும் பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடும். தூத்துக்குடி மீனவா் பகுதிகளில் தூண்டில் வளைவு திட்டப் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் படகுகள் சேதமடைந்து மீனவா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
அதிமுக தலைவா்களைப் பற்றிப் பேசும் விஜய், மேடைக்கு மேடை மாற்றிப் பேசுகிறாா். மக்கள் அவரை ஒரு நடிகராகத் தான் பாா்க்கிறாா்கள். அரசியல் தலைவராக அல்ல என்றாா் அவா்.
அப்போது, மாநில வா்த்தகரணி துணைச் செயலா் ஆா்.எல். ராஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவா் சின்னத்துரை, நிா்வாகிகள் கே.டி.சி. சங்கா், ஐயப்பன், ராதா ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.