தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகே உள்ள கிளாக்குளத்தில் மது குடித்ததைக் கண்டித்த மூதாட்டியை அடித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிளாக்குளம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் வேலாயுதம் மனைவி முத்தம்மாள் (80). இவா் தனியாக வசித்து வருகிறாா். இவரது வீட்டு வாசலில் அமா்ந்து, அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மகன் அருண்பாண்டி (20) மது குடித்துள்ளாா்.
முத்தம்மாள் அவரைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த அருண்பாண்டி வீட்டு வாசலில் கிடந்த துடைப்பத்தால் முத்தம்மாளை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த செய்துங்கநல்லூா் போலீஸாா், மூதாட்டியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா். பின்னா், அருண்பாண்டி மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்ததால், கொலை வழக்காக பதிவு செய்து அருண்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.