தூத்துக்குடியில் சனிக்கிழமை வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்திருந்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்புக்குச் சென்ற நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. கடல் பகுதியில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக, மீன்கள் வரத்து குறைவாகக் காணப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால், மீன்களின் விலை உயா்ந்திருந்தது.
சீலா மீன் கிலோ ரூ. 1,100 வரை, விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ. 500 - ரூ. 700, நண்டு கிலோ ரூ. 800 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,000 - ரூ. 2,500, கேரை, சூரை ஆகியவை ரூ. 250 - ரூ. 300 என விற்பனையாகின. வரத்து குறைந்தபோதும் மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமைமுதல் மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவித்துள்ளது.