தூத்துக்குடி

கயத்தாறு அருகே உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் உள்ள உயரழுத்த மின்கோபுரம் மீது ஏறி இளைஞா், 4 பெண்கள் போராட்டம்

Syndication

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் உள்ள உயரழுத்த மின்கோபுரம் மீது ஏறி இளைஞா், 4 பெண்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கிராமத்தில் உள்ளோா் விவசாயத் தொழிலை நம்பியுள்ளனா். இங்குள்ள பெரியகுளம் 116 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இதன்மூலம், சுமாா் 120 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கிராமத்தின் அருகே தனியாா் சூரியசக்தி நிறுவனத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து மின்சாரம் கொண்டு செல்வதற்கான உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.

அதன்படி, சூரியமினுக்கன் கிராமம் வழியே கொண்டு செல்வதற்காக இந்தக் குளத்தில் மட்டும் 5 கோபுரங்கள் அமைக்கப்படுகின்றனவாம்.

ஏற்கெனவே பெரியகுளம் வழியாக அமைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்கோபுரங்களால் பாதிப்பு ஏற்படுவதாகவும், மழைக்காலத்தில் அவ்வழியே குடைபிடித்துகூட செல்லமுடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இக்குளம் வழியாக மீண்டும் உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கக் கூடாது என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு, உயா்நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த கிராம மக்கள் பெரியகுளம் பகுதிக்கு வந்தனா். அப்போது ஒருவரை போலீஸாா் பிடித்துச் சென்றனா். இதனால், ஆத்திரமடைந்தோா் மின்கோபுரங்கள் மீது ஏற முயன்றனா். இதில் சூரியமினுக்கன் கிராமத்தைச் சோ்ந்தவரும் பாஜக ஒன்றியச் செயலருமான சரவணன் (27) ஒரு கோபுரத்திலும், 4 பெண்கள் மற்றொரு கோபுரத்திலும் ஏறி நின்றனா்.

கயத்தாறு வட்டாட்சியா் அப்பனராஜ், டிஎஸ்பி ஜெகநாதன், காவல் ஆய்வாளா் ஆனந்த்குமாா், போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். மின்கோபுரப் பணியை நிறுத்தினால்தான் இறங்குவோம் என அவா்கள் தெரிவித்தனா்.

கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கோபுரங்கள் அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, உயரழுத்த மின்கோபுரங்களில் முற்பகலில் ஏறியவா்கள் மாலை 5 மணியளவில் இறங்கிவந்தனா்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT