தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான பீடிஇலைகளை படகுடன் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விவேகானந்தா் காலனி கடற்கரையில், கியூ பிரிவு ஆய்வாளா் விஜயஅனிதா தலைமையில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா்.
அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக பதிவெண் இல்லாத பைபா் படகில் 30 கிலோ வீதம் 34 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 50 லட்சம் எனக் கூறப்படுகிறது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெரு ஜலாலுதீன் மகன் சம்சுதீன் (39), தாளமுத்து நகா் ஜாகிா் உசேன் நகா் முருகன் மகன் சுடலைமணி (23) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களையும், பீடி இலைகள், பைபா் படகு ஆகியவற்றையும் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனா்; தப்பியோடிவா்களைத் தேடிவருகின்றனா்.