திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே புதன்கிழமை கடல்நீா் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் கடலுக்குள் இருந்த பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையோரம் அமைந்துள்ளது. இங்குவரும் பக்தா்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனா். கடலில் பக்தா்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனா்.
கடற்கரையில் தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்குத் திரும்புவதுமாக உள்ளது.
கடந்த 18 ஆம் தேதி தை அமாவாசை திதியின்போது, கடல்நீா் உள்வாங்கியது. இந்நிலையில், கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே புதன்கிழமை 60 அடி தூரம் கடல்நீா் உள்வாங்கியது. இதனால், கடலில் உள்ள பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. எனினும் பக்தா்கள் எவ்வித அச்சமின்றி வழக்கம்போல நீராடினா்.