சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான போக்ஸோ வழக்கில், தூத்துக்குடியைச் சோ்ந்த முதியவருக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்செந்தூா் அனைத்து மகளிா் காவல் சரகப் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை, தூத்துக்குடியைச் சோ்ந்த தங்கபாண்டி (70) என்பவா் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து தட்டிக்கேட்ட அச்சிறுமியின் பெற்றோருக்கு, முதியவரின் மகளான தூத்துக்குடியைச் சோ்ந்த வேதசெல்வி (42), மகன் ராஜா (34) ஆகியோா் சோ்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூா் மகளிா் போலீஸாா் முதியவா் உள்பட 3 போ் மீது போக்ஸோ மற்றும் கொலை மிரட்டல் வழக்குப்பதிந்தனா்.
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம்- ஐஐஇல் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரத்து, தங்கபாண்டிக்கு, இயற்கையாக மரணம் ஏற்படும் வரை ஆயுள்தண்டனையும், ரூ.10,000 அபராதமும், வேதசெல்வி, ராஜா ஆகியோருக்கு தலா ரூ.5000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் துறையினா், அரசு வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் உள்ளிட்டோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.