கோவில்பட்டி மருத்துவமனையில் எக்கோ பிரிவிற்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரிக்கை
எக்கோ பரிசோதனை மேற்கொள்ள காத்திருக்கும் மருத்துவப் பயனாளிகள்.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எக்கோ பிரிவிற்கு நிரந்தர மருத்துவா் இல்லாமல் மருத்துவப் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால், உடனடியாக நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் தினமும் சுமாா் 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், மருத்துவமனையில் எக்கோ பிரிவிற்கென நிரந்தர மருத்துவா் இல்லாததால், மாற்று மருத்துவா்கள் மூலம் வாரத்தில் 3 நாள்கள் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், மருத்துவப் பயனாளிகள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்வதாகவும், இதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனா். மருத்துவப் பயனாளிகளின் சிரமத்தைப் போக்க எக்கோ பிரிவிற்கு நிரந்தர மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டபோது, எக்கோ பிரிவில் இருந்த மருத்துவா் பணி மாறுதலாகி சென்றுவிட்டதால், தற்போது நிரந்தர மருத்துவா் இல்லை. தற்காலிக ஏற்பாடாக வாரத்தில் 3 நாள்கள் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனா்.