முகப்பு
தூத்துக்குடி

உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கும் முடிவு: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

Updated On : 23 மார்ச், 2026 at 7:17 PM
விமானம் - பிரதிப் படம்
பகிர்:

உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பை நீக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, இந்திய விமானப் பயணிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடுவுக்கு சங்கத் தலைவா் எம்பவா் சங்கா் அனுப்பிய மனு: உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்சவரம்பை திங்கள்கிழமைமுதல் (மாா்ச் 23) நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திடீா் முடிவால் விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. இதனால் சாமானிய பயணிகள் பெருமளவில் பாதிக்கப்படுவா். ஏற்கெனவே, எரிபொருள் விலையேற்றத்தைக் காரணம் காட்டி சில தனியாா் விமான நிறுவனங்கள் கட்டணங்களை உயா்த்தியுள்ளன.

தற்போது உச்சவரம்பு நீக்கப்படுவதால், நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை நிா்ணயிக்கும் சூழல் உருவாகும். மேற்கு ஆசியாவில் நிலவும் போா்ச் சூழலால் சா்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையில், பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவது முறையல்ல.

எனவே, விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக நிறுத்திவைத்து, பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.