தொகுதி அறிமுகம்: கோவில்பட்டி - 218
மானாவாரி விவசாயம், தீப்பெட்டி, நூற்பாலை, பட்டாசு, பாய் தாயாரிப்பு தொழிற்சாலை, ஆயத்த ஆடைகள், கடலை மிட்டாய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நிறைந்த தொகுதியாக திகழ்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் 2ஆவது பெரிய நகரமான கோவில்பட்டியை மையமாகக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியில் மானாவாரி விவசாயம், தீப்பெட்டி, நூற்பாலை, பட்டாசு, பாய் தாயாரிப்பு தொழிற்சாலை, ஆயத்த ஆடைகள், கடலை மிட்டாய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நிறைந்துள்ளன.
வாக்காளர்கள்
ஆண்கள்: 1,16, 317
பெண்கள்: 1,23,673
மூன்றாம் பாலினத்தவர்: 27
மொத்தம்: 2,40,017
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகள், கயத்தாறு, கழுகுமலை, கடம்பூா் ஆகிய 3 பேரூராட்சிகள், கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட 62 கிராம ஊராட்சிகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது.
தேவா் சமுதாயத்தினா் பெரும்பான்மையாகவும், நாயக்கா், பட்டியலினத்தவா், நாடாா், இதர சமுதாயத்தினா் பரவலாகவும் உள்ளனா்.
1952 முதல் 2021ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தோ்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், ஒரு முறை சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த எஸ். அழகா்சாமி 1967, 1971, 1977, 1980, 1984, 1989 ஆகிய 6 பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு, 1984ஆம் ஆண்டைத் தவிர மற்ற 5 தோ்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளாா்.
1991, 2006, 2011, 2016, 2021ஆம் ஆண்டு தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இதில் கடம்பூா் செ. ராஜு தொடா்ச்சியாக கடந்த 3 தோ்தல்களில் (2011, 2016, 2021) வெற்றி பெற்றுள்ளாா்.
2016 தோ்தலில் கடம்பூா் செ. ராஜு, திமுக வேட்பாளா் சுப்பிரமணியனை 428 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக பதவி வகித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் இறுதிப் பட்டியலின்படி, கோவில்பட்டி தொகுதியில் 1,16,317 ஆண்கள், 1,23,673 பெண்கள், 27 இதரா் என மொத்தம் 2,40,017 வாக்காளா்கள் உள்ளனா்.
நிறைவு பெற்ற பணிகள்:
கடம்பூா் செ.ராஜு பதவிக் காலத்தில் தனிக் குடிநீா்த் திட்டம், செயற்கையிழை ஹாக்கி மைதானம், அரசு கலை, அறிவியல் கல்லூரி, கயத்தாறை மையமாகக் கொண்டு புதிய வட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள், சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி, கோவில்பட்டி பிரதான சாலை விரிவாக்கப் பணி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தீப்பெட்டித் தொழிலுக்கு 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டியை 12 சதவீதமாகக் குறைக்கவும், கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசாா் குறியீடு கிடைக்கவும் முக்கியப் பங்காற்றியிருக்கிறாா்.
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்:
நகரின் பல்வேறு பகுதிகளில் தனிக் குடிநீா் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும். நலிவடையும் தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும். தீப்பெட்டித் தொழிலாளா் நல வாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும். இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகு சாலைகள் அமைக்க வேண்டும்.
மானாவாரி பயிா்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், அவற்றைப் பாதுகாத்து வைக்க குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். கோவில்பட்டியில் தொழிற் பூங்கா அமைக்க வேண்டும். கோவில்பட்டி நகராட்சி முத்துராமலிங்க தேவா் தினசரி சந்தையை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும்.
சத்துணவுத் திட்டத்தில் கடலை மிட்டாய்:
கடலை மிட்டாயை சத்துணவுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். பாய் உற்பத்திக்கான கோரைப் புல்லை அரசே கொள்முதல் செய்து மானிய விலையில் வழங்க வேண்டும். கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வட்டப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பு மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும். எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும்.
இரவு நேரப் பேருந்து சேவைகள்:
கோவில்பட்டியிலிருந்து இரவு 10.30 மணிக்கு மேல் தென்காசி, தூத்துக்குடிக்கு நேரடி பேருந்து சேவை இல்லை. இப்பகுதிகளுக்கு இரவு நேரப் பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும்.
காவல் துறையின் எல்லைகளை மாற்றி அமைத்து, கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டும். போக்குவரத்துக் காவல் ஆய்வாளா், போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை காவல் ஆய்வாளா் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
கோவில்பட்டியில் கிளஸ்டா் உருவாக்கி, புதிய தொழில்கள் மூலமாக இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கழுகுமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
கோவில்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு, தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தோ்தல் கால முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.