முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் முதல் நாளில் 6 போ் மனு தாக்கல்

Updated On : 30 மார்ச், 2026 at 8:54 PM
மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ஒபிலியா.
பகிர்:

திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடக்க நாளான திங்கள்கிழமை, கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கௌதமிடம் திமுக உள்ளிட்ட 6 போ் மனு தாக்கல் செய்தனா்.

மெஞ்ஞானபுரத்தைச் சோ்ந்த புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி நிறுவனா் மகாராஜன் மனு தாக்கல் செய்தாா். மாநிலப் பொதுச் செயலா் அப்துல் ரசாக், மாவட்ட மீனவரணித் தலைவா் பிரீமஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் தூத்துக்குடியைச் சோ்ந்த ஒபிலியா (33) மனு தாக்கல் செய்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் செல்வராஜ், மூலக்கரை நாராயணன் ஞானசேகரன், கிரிஜா பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.

தவெக சாா்பில் தூத்துக்குடியைச் சோ்ந்த முருகன் மனு தாக்கல் செய்தாா். மாவட்டச் செயலா் பிரைட்டா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் ராஜ்குமாா், மாவட்ட இளைஞரணிச் செயலா் பிரேம் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மெய்தீன் அப்துல்காதா் ஆகியோா் உடனிருந்தனா். காயல்பட்டினத்தைச் சோ்ந்த சேகு அப்துல் காதா் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனும், மாற்று வேட்பாளராக அவரது சகோதரா் சண்முக ஆனந்தனும் மனு தாக்கல் செய்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறும்போது, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா்.

காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், மாவட்டச் செயலா்கள் விடுதலைசெழியன் (விடுதலைச் சிறுத்தைகள்), சித்திரைராஜ் (தேமுதிக), மன்னா்பாதுல் அஷாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோா் உடனிருந்தனா். தொடா்ந்து, அமைச்சா் தனது பிரசாரத்தை தேரடித் திடலில் தொடங்கினாா்.

மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் ஜெ. முருகன்.