முகப்பு
தூத்துக்குடி

வாகனங்களில் குப்பைகளை மூடி எடுத்துச் செல்ல வலியுறுத்தல்

Updated On : 3 மே 2026, 5:31 am IST
பகிர்:

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை வலைதூணிகளை கொண்டு மூடி எடுத்து செல்ல பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை மினி லாரி போன்ற சுமை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, திட்டங்குளம் அருகே சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கிற்கு தூய்மைப் பயணியாளா் கொண்டு செல்வாா்கள்.

அவ்வாறு கொண்டு சொல்லும்போது, மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை முறையாக மூடுவதில்லை. குப்பைகள் பறந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் பாதசாரிகள், வாகனங்களில் மீது விழுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனா். சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் சிதறி அசுத்தமாகவும் காணப்படுகின்றன.

Advertisement

எனவே, தாா்ப்பாய் அல்லது வலைதுணியை கொண்டு முறையாக மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.