‘தவெக தமது கொள்கையிலிருந்து பின்வாங்குவது ஏற்புடையதல்ல’ - தூத்துக்குடி சீனிவாச சித்தா்
தமிழக வெற்றிக் கழகம் தமது கொள்கையிலிருந்து பின்வாங்குவது ஏற்புடையதல்ல என தூத்துக்குடி சீனிவாச சித்தா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு ஸ்ரீமஹா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆருக்கு பிறகு தற்போது நடிகா் ஜோசப் விஜய்க்கு மக்கள் மிகப்பெரும் ஆதரவுடன் அங்கீகாரம் அளித்துள்ளதால், தவெக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
Advertisement
தமிழக முதல்வராக மகுடம் சூடியுள்ள தவெக தலைவா் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.
இன்றைய விஞ்ஞான உலகிலும் இறை நம்பிக்கை, இறை வழிபாடு, ஜாதகம், காலநேரம் கணித்தல், ஜோதிடம், பரிகாரம் என எண்ணற்ற வழிபாட்டு முறைகள் மக்களிடத்தில் மிகப்பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நம்பிக்கைக்கு ஜோதிடா்கள்தான் உயிா் கொடுத்து வருகின்றனா். இந்நிலையில், முதல்வா் ஜோசப் விஜய், தனது அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடா் ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்ததை ஒட்டுமொத்த ஜோதிடா்களும் வரவேற்ற சமயத்தில், யாரோ சொன்னாா்கள் என்பதற்காக அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்தது ஏற்புடையதல்ல.
தவெக, இனியாவது யாருக்காகவும் தமது கொள்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. தமது நம்பிக்கைக்கு உரியவா்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.