திருச்சி

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: தேவை கூடுதல் புகைப்பட நிபுணர்கள்

திருச்சி, அக். 2:   கிராமப்புற மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், "ஸ்மார்ட் கார்டு'க்கான புகைப்படம் எடுக்கும் பணியில் கூடுதலாக புகைப்பட ந

கு. வைத்திலிங்கம்

திருச்சி, அக். 2:   கிராமப்புற மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், "ஸ்மார்ட் கார்டு'க்கான புகைப்படம் எடுக்கும் பணியில் கூடுதலாக புகைப்பட நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

  நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும், உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் பெற முடியாமல் கிராமப்புறங்களைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழ்நிலையைத் தடுக்கும் வகையில், தமிழக அரசால் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  திருச்சி மாவட்டத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகளை மேற்கொள்ள, 25-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த மருத்துவமனைகளில் இதுநாள் வரை 263 பேருக்கு ரூ. 69.42 லட்சம் செலவில் உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெறுபவர்களைத் தேர்வு செய்யும் வகையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் "ஸ்மார்ட் கார்டு' (அடையாள அட்டை) வழங்கத் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணியை அரசு நிர்வாகம் மேற்கொள்ளாமல், காப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.  திருச்சி மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் 6.5 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குள் அனைத்து ஒன்றியங்களிலும் ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணியை முடிக்கத் திட்டமிட்டுள்ளது.

  ஆனால், இந்தக் காலவரையறைக்குள் புகைப்படம் எடுக்கும் பணியை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஸ்மார்ட் கார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்படுவதால், புகைப்படக் கலைஞர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது.

  திருச்சி மாவட்டத்தில் லால்குடி ஒன்றியத்தில், பூவாளூரில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்கிய பணி, தற்போது ஒவ்வொரு ஒன்றியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இதுவரை லால்குடி வட்டத்தில் 51,047 பேருக்கும், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 38,191 பேருக்கும், துறையூர் வட்டத்தில் 31,475 பேருக்கும் என மொத்தம் 1.20 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுக்கான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக லால்குடி வட்டத்தில் 4,479 பேருக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுவிட்டது.

  மடிக்கணினி மூலமாக தினமும் ஒரு புகைப்படக் கலைஞர் மூலம் 150 குடும்பங்களுக்கு புகைப்படம் எடுக்கப்படும் என்று அறிவித்தாலும், கிராமங்களில் அறிவித்ததைவிட இரு மடங்குக்கு மேலாகவே ஒரு புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.  ஆனால், பல கிராமங்களில் மக்கள் தொகை அதிமாக உள்ளதால், இரு புகைப்படக் கலைஞர்களால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. சில கிராமங்களில் இரவு 10 மணி வரைகூட பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதற்காகக் காத்திருக்க வேண்டிய நிலைதான் உள்ளது.

  வழிகாட்ட ஆள் இல்லை: நல வாரியங்களில் பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுள்ளவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பதிவு செய்து கொண்டு விட்டு காப்பீட்டுத் திட்டத்துக்காக புகைப்படம் எடுக்கச் செல்லலாம்.

  ஆனால், இதுவரை எந்த வாரியத்திலும் உறுப்பினராகாதவர்கள் குடும்ப அட்டையைக் காண்பித்து, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  பதிவு செய்யும் பணியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட சிலர் பணியாற்றி வருகின்றனர். சில கிராமங்களில் இந்த நிலை இருப்பதில்லை. கிராமங்களில் கூடும் மக்கள் கூட்டத்தால் அவர்களால் விரைவாகப் பணிகளைச் செய்ய முடிவதில்லை. இதனால், பதிவு செய்வதற்கே பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது.

  சில கிராமங்களில் எங்கே பதிவு செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்று வழிகாட்டுவதற்குகூட ஆள்கள் இல்லை.

  கூடுதலாக புகைப்படக் கலைஞர்கள்: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்காக கூடுதல் புகைப்படக் கலைஞர்களை பணியில் அமர்த்தி, இப்பணியை விரைவாக முடிப்பதற்கு மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

  இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் புகைப்படம் எடுக்கும் பணி விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT