திருச்சி, செப். 6: திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக ரூ. 5.80 கோடியில் பள்ளிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல் வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் தற்போது செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்கு மாணவர்கள் அமருவதற்கான இருக்கைகள், மேஜைகள் போன்றவை தேவை என்ற விவரங்கள் பெறப்பட்டு, அந்த வகையில் "ஆர்டர்' அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக உயர் தொடக்கப் பள்ளி (நடுநிலைப் பள்ளி), உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு "டான்சி' நிறுவனம் மூலமாக ரூ. 2 கோடியில் இருக்கைகள், மேஜைகள், வழங்கப்பட உள்ளன.
இதற்காக, கும்பகோணத்தில் உள்ள டான்சி மையத்தில் தயாரிக்கப்பட்டு, 5594 செட் இருக்கைகள், மேஜைகள், பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இவை வந்தவுடன் ஒன்றியம் வாரியாக வழங்கப்படும்.
மாவட்டத்தில் பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறைகளில் மோசமாக உள்ள தரைத்தளங்களை மாற்றி புதிதாகத் தரைத்தளம் அமைத்தல், கரும்பலகைகளை மாற்றுதல், பள்ளிகளில் பழுதாகியும், மோசமான நிலையிலும் உள்ள மின்வயர்களை மாற்றுதல், பழுதாகியுள்ள கணினிகளைச் சரி செய்தல் போன்ற பணிகளைச் செய்வற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல பள்ளிகளில் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஆய்வுக்கு நிதி: செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்றவற்றில் ஆசிரியர், ஆசிரியைகளின் பங்கு, நிறை, குறைகளை ஆய்வு செய்வதற்கும் நிதி வழங்கப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் 10 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஆய்வு நிதியாக ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் 160 பேருக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் வசதி: திருச்சி மாவட்டத்தில் அண்மையில் தொடக்கப் பள்ளிகளிலிருந்து உயர் தொடக்கப் பள்ளிகளாக 12 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளில் கட்டடம், குடிநீர், கழிப்பிடம், சமையல் அறை வசதிகள் செய்து தரப்பட உள்ளன.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ. 9.75 லட்சம் என்ற வகையில், ரூ. 1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும். இது மட்டுமல்லாமல் 7 பள்ளிகளுக்கு குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கான 70 கழிப்பறைகளும், 24 பொதுக் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு கழிப்பறைக்கும் தலா ரூ.50,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் உள்ள, பிரச்னைக்குரிய இடங்களில் உள்ள பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லாத பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அந்தந்த சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலமாக இந்த விவரங்கள் பெறப்பட்டு, 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் 50 மீட்டர் தொலைவுக்குச் சுற்றுச் சுவர் முதலில் கட்டப்படும். ஒரு மீட்டருக்கு ரூ. 1500 வீதத்தில் தொகை வழங்கப்படும்.
கணினி வழிக் கல்விப் பயிற்சி:மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் மூலமாக கணினி வழிக் கல்வியை மேம்படுத்துவதற்கான பயிற்சி விரைவில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
"10 நாள்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில் 50 ஆசிரியர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு சுற்று பயிற்சி முடிந்த பின்னரும் அடுத்த பயிற்சி தொடங்கும். சுமார் ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரை இந்தப் பயிற்சியை நடத்தவும் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது' என்றார் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் மு. விஜயகுமாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.