முகப்பு
திருச்சி

பாடப்புத்தகங்கள் கிடைக்காததால் அரசுப் பள்ளி மாணவர்கள் அவதி

ஆலங்குடி, ஆக.  5:  பள்ளிகள் திறந்து இரு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிகளில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்காததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:00 PM
பகிர்:

ஆலங்குடி, ஆக.  5:  பள்ளிகள் திறந்து இரு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிகளில் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்காததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அரசே வழங்குகிறது.

  இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் பெரும்பாலான அரசுப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் இன்னும் வந்து சேரவில்லை. ஒரு சில பள்ளிகளுக்கு மட்டுமே - அதுவும் - சில பாடங்களுக்கான புத்தகங்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன என்று பள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இம்மாதம் முன்பருவத் தேர்வும் அடுத்த மாதம் காலாண்டுத் தேர்வும் நடைபெறவுள்ள நிலையில் பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்காதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

  காரணம் என்ன?: கடந்த கல்வியாண்டு வரை இந்தப் புத்தகங்கள் கல்வித் துறை அலுவலகங்களிலிருந்து பள்ளி ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன.

  ஆனால், நிகழாண்டில் ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதாகக் கூறி அஞ்சல் வழியில் பள்ளிகளுக்குப் புத்தகங்களை அனுப்பிவைக்கும் திட்டத்தை கல்வித் துறை அறிமுகப்படுத்தியது. இதுவே பாடப்புத்தகங்கள் பள்ளிகளை இன்னும் வந்தடையாததற்குக் காரணம் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

  இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ரெ. பரமசிவம் கூறியது:

   ""பாடப்புத்தகங்களை அஞ்சல் மூலம் அனுப்பியதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, தேவைக்கு அதிகமாக அளிக்கப்பட்ட பள்ளிகளிலிருந்து புத்தகங்களைச் சேகரித்து, பற்றாக்குறை நிலவும் பள்ளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புத்தகங்கள் கிடைக்காத பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் எங்களைத் தொடர்புகொண்டால், உடனடியாக புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அவர்.

  இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியது:

  ""பாடப்புத்தகங்கள் இன்னும் வரவில்லையே என்று கல்வித் துறை அலுவலகத்தில் கேட்டால், "அஞ்சல் வழியில் அனுப்பிவிட்டோம்' என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

  ஆனால், அஞ்சலில் அனுப்பியிருந்தால், புத்தகங்கள் பள்ளிகளை வந்தடைந்திருக்க வேண்டும்; அல்லது கல்வித் துறை அலுவலகங்களுக்கே திரும்பிச் சென்றிருக்க வேண்டும். இரண்டுமே இல்லை. அப்படியானால், புத்தகங்கள் எங்கே போயின'' என்கிறார் அந்த ஆசிரியர்.

  ஆனால், பெற்றோர்கள் இந்த இரு வாதங்களையுமே ஏற்கத் தயாராக இல்லை. மாறிமாறி காரணம் காட்டுவதை விட்டுவிட்டு அனைத்துப்  பள்ளிகளிலும் எல்லா மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்கு, மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →