திருச்சி

அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் கல் குவாரி?

திருவெறும்பூர், ஆக. 9: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் கல்குவாரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.   திரு

சி.சண்முகவேல்

திருவெறும்பூர், ஆக. 9: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் கல்குவாரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

  திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உள்பட்டது நடராஜபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிப் பகுதியில் கூத்தைப்பார் அரசங்குடி சாலையில் உள்ளது கச்சேத்தி மலை என்ற சிறிய கிராமம்.

  இங்கு சாலை ஓரத்தில் கல் குவாரி ஒன்று உள்ளது. இந்தக் குவாரி அரசு அனுமதி இல்லாமல் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. குவாரியில் சுமார் 300 அடி ஆழம் வரை பாறைகள் உடைக்கப்பட்டு, கல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் வெடி வைத்துப் பாறைகள் தகர்க்கப்படுவதால், இந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்துள்ளன. இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

   மேலும், இந்தக் குவாரியின் சுற்றுப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேல்பட்ட ஏக்கரில் நெல், உளுந்து, எள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகிறார்கள். குவாரியில் வெடி வைத்துப் பாறைகள் தகர்க்கப்படுவதால், இதிலிருந்து சிதறும் கல்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுவதால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

    இதுதவிர, கால்நடைகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

    இதனால், இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் குவாரி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனுக்கள் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  இதுகுறித்து கூத்தைப்பார், கச்சேத்தி மலை மக்கள் கூறியது:

  கச்சேத்தி மலை என்பது சிறிய குன்றுப் பகுதியாகும். இங்கு சுமார் 50 குடும்பங்கள் வரை வசிக்கின்றன. இந்தப் பகுதி நடராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்டதாக இருந்தாலும், கூத்தைப்பார் அருகில் உள்ளது.

  கச்சேத்தி மலையைச் சுற்றி சுமார் 500-க்கும் மேல்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசங்குடி சாலையில் உள்ள கல் குவாரி விவசாயப் பகுதிக்கு நடுவில் இயங்கி வருகிறது. இந்தக் குவாரியில் இரவு நேரங்களில் வெடி வைத்துப் பாறையைத் தகர்ப்பதால் கல்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுகின்றன. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், வெடி சப்தத்தாலும், கல்கள் விழுவதாலும் கால்நடைகள் பயத்தில் அலறுகின்றன. நாள்தோறும் மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

   இந்தக் குவாரி அரசு அனுமதியுடன் செயல்படுகிறதா எனத் தெரியவில்லை. இதனால், துவாக்குடியில் கல் குவாரிகளை தடை செய்தது போல, இந்தக் குவாரியையும் தடை செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

   இதுகுறித்து திருச்சி மாவட்ட கனிம வள அலுவலக அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியது:

   திருவெறும்பூர் பகுதியில் எந்தவித கல் குவாரியும் தற்போது இயங்கவில்லை. அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை பகுதியில் மட்டும் 5 கல் குவாரிகளும், சூரியூரில் ஒரு குவாரியும் இயங்கி வருகின்றன. திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு உள்பட்ட நடராஜபுரம் ஊராட்சியில் உள்ள கச்சேத்தி மலையில் கல் குவாரி எதுவும் கிடையாது என்றனர்.

  திருவெறும்பூர் பகுதி குவாரிகள் குறித்து முழு விவரம் கேட்ட போது, அதிகாரிகள் போதுமான தகவல்களைத் தெரிவிக்கவில்லை.

   எனவே, எத்தனை கல் குவாரிகள் அனுமதியுடன் செயல்படுகின்றன, அனுமதி இல்லாமல் செயல்படும் கல் குவாரிகள் எத்தனை என்பதை அரசு கண்காணித்து, அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT