நீதிமன்றத் தடையாணை பெறப்பட்ட இடத்தில் தொடரும் போராட்டங்கள்
கரூர், ஆக. 22: கரூரில் நீதிமன்றத் தடையாணை பெறப்பட்ட இடத்தில் தொடரும் போராட்டங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது கொள்கைகளை பொதுமக்களிட
கரூர், ஆக. 22: கரூரில் நீதிமன்றத் தடையாணை பெறப்பட்ட இடத்தில் தொடரும் போராட்டங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதற்காக கூட்டங்களை நடத்துவது வழக்கம். இதற்காக பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் அவர்களது கொள்கைகளை விளக்கும் வகையில் கூட்டங்களை நடத்துவர்.
இதேபோல, மக்களைப் பாதிக்கும் விஷயங்களை பொதுமக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வதற்கும், அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவும் அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது வழக்கம்.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் கரூர் நகரப் பகுதிக்குள் எங்கெங்கு நடத்தப்பட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், கரூர் நகரில் வடிவேல்நகர், வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தம், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சுபாஷ்சந்திரபோஸ் சிலை அருகில், தேர்வீதி, ஆலமரத் தெரு, குமரன் பள்ளி அருகில், செங்குந்தபுரம் பிரதான சாலை, சின்னஆண்டாங்கோயில் சாலை, தேவாலய முனைய வேலுப் பள்ளி, ரத்தினம் சாலை, 80 அடி சாலை, பிரம்மதீர்த்தம் சாலை, லைட்ஹவுஸ் முனைப் பகுதி, கோவை சாலை, காமராஜ்நகர், காமாட்சியம்மன் கோயில் எதிர்புறம் உள்ளிட்ட 25 இடங்கள் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட அரசியல் சார்பான கூட்டங்கள் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும், பெரும்பாலான கண்டன ஆர்ப்பாட்டங்கள் கரூர்- கோவை சாலையில் மனோகரா முனைப் பகுதியிலும், வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமும்தான் நடைபெற்று வருகின்றன.
இதில், மனோகரா முனைப் பகுதி போக்குவரத்து மிகுந்த முக்கியமான பகுதியாகும். இந்தப் பகுதியில் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி, கல்லூரிப் பேருந்துகளில் செல்ல வேண்டியவர்கள், மினி பேருந்துகளில் செல்ல வேண்டியவர்கள் காத்திருந்து பேருந்தில் ஏறிச்செல்வது வழக்கம்.
இதனால், இந்தப் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தப் பகுதியில்தான் கரூரில் நடைபெறும் பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்தப் பகுதியில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு அதிக இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும், முக்கிய கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடும்போது, இந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படுகின்றன.
எனவே, மனோகரா முனைப் பகுதியில் அரசியல் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், விளம்பரங்கள் செய்யக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தப் பகுதியில் கடைகள் நடத்தி வரும் சில தனிநபர்கள் பெற்றுள்ளனர். இதுதொடர்பான நீதிமன்ற ஆணையும் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதியில் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எந்த அரசியல் அமைப்பினரும் இந்த அறிவிப்புப் பலகையைக் கண்டுகொள்வதேயில்லை. "இந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் கூடாது' என்ற நீதிமன்ற உத்தரவு பலகையின் அருகிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதியில்லாத இடத்தில் கூட்டங்கள் நடத்த போலீஸôர் எவ்வாறு அனுமதி அளிக்கின்றனர் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நீதிமன்ற தடையுத்தரவு பெற்ற இடத்திலேயே இதுபோன்ற கூட்டங்கள் நடத்துவது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாக உள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்திலேயே ஆர்ப்பாட்டங்களை நடத்த அரசியல் கட்சியினரும், மற்ற அமைப்பினரும் விரும்புவர். எனவே, நீதிமன்றத் தடை உத்தரவை அமலாக்குவதா அல்லது அரசியல் கட்சியினரின் விருப்பத்தை நிறைவேற்றுவதா என்பதை அனுமதியளிக்கும் போலீஸôர்தான் முடிவு செய்ய வேண்டும்.