திருச்சி

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் நிதி ஒதுக்கப்படுமா?

திருவெறும்பூர், ஆக. 25: கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்களின் வறுமையைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்

சி.சண்முகவேல்

திருவெறும்பூர், ஆக. 25: கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி, அவர்களின் வறுமையைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசால் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம்.

   இந்தத் திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்டு, படிப்படியாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

   கிராமங்களில் வாழும் குடும்பங்களுக்கு குறைந்தது 100 நாள்கள் பணி உத்தரவாதத்துடன் தொடங்கப்பட்டது இந்தத் திட்டம். இதில் பணிபுரிபவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள்தான்.   இந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்காக ஊராட்சி நிர்வாகம் வருகைப் பதிவேட்டைப் பராமரிப்பதோடு, அடையாள அட்டையையும் வழங்கியுள்ளது. மேலும், வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டு, கூலித் தொகையை அதில் செலுத்தி, சேமிக்கும் பழக்கமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.     இந்தத் திட்டத்தில் கிராமப்புறங்களில் புதிதாகச் சாலைகள் அமைத்தல், ஏரி, குளங்களைச் சீரமைத்தல், ஆழப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணியாற்றுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு | 80 ஊதியமாக வழங்கப்பட்டது.

   இந்த நிலையில், மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்தது. அதோடு, | 80 கூலியை | 100 என உயர்த்தி அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் குறைந்தது 7 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

   இந்த நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஊராட்சிகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.   இதையடுத்து, பல ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தத் திட்டத்தில் பணியாற்றிய ஏழைக் குடும்பங்கள் கவலை அடைந்துள்ளன.

  திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பழங்கானங்குடி, அசூர், பத்தாளப்பட்டை, ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் இதுபோன்ற பிரச்னை உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து விவசாய சங்க திருச்சி மாவட்டத் தலைவர் நடராஜன் கூறியது:

   தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. பத்தாளப்பேட்டை ஊராட்சியில் பணியாற்றியவர்களுக்கு சூரியூர் ஊராட்சி நிதியிலிருந்து கடன் பெற்று ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.  இதேபோல, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சிகளுக்கு இந்தத் திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கவில்லை. இதனால், அந்த ஊராட்சிகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

   இதுகுறித்து கடந்த வாரம் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு விரைவாக, கண்டிப்பாக நிதி ஒதுக்கும் என்று வட்டாட்சியர் கூறினார்.

   இந்த பிரச்னைகள் பல்வேறு மாவட்டங்களிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, விரைவில் விவசாய சங்கங்கள் சார்பில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

   இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியது:

   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கி வந்தது. ஆனால், கடந்த மூன்று வாரங்களாக நிதி ஒதுக்கவில்லை. இதனால், இந்தத் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை.

   மக்கள் அனைவரும் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட, இந்த நிலையில் ஓர் ஊராட்சியிலிருந்து கடனாகப் பெற்று, மற்றொரு ஊராட்சிக்கு கொடுத்து இந்த பிரச்னை தாற்காலிகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரச்னை உள்ள ஊராட்சிகளில் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகள் அரசு நிதி ஒதுக்கும் வரை நிறுத்தப்பட்டுள்ளன. பணிகளைத் தொடங்கி விரைவாகச் செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.  எனவே, இந்தத் திட்டம் தொய்வு இல்லாமல் செயல்பட, ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு காலம் கடத்தாமல் செயல்பட வேண்டும் என கிராமப்புற ஏழை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT