ஜவுளித் தொழில் வளர்ச்சி: மத்திய அரசின் அறிவிப்புகள் கண்துடைப்பு நடவடிக்கை?
கரூர், ஆக.27: ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் சலுகை அறிவிப்புகள் கண் துடைப்பு அறிவிப்புகளாகவே உள்ளன எனப் புகார் எழுந்துள்ளது. வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் இந்திய அளவில் கரூருக்கு தனி
கரூர், ஆக.27: ஜவுளித் தொழிலின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் சலுகை அறிவிப்புகள் கண் துடைப்பு அறிவிப்புகளாகவே உள்ளன எனப் புகார் எழுந்துள்ளது.
வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியில் இந்திய அளவில் கரூருக்கு தனியிடம் உண்டு. கரூரில் உற்பத்தியாகும் திரைச் சீலை, மேஜை, படுக்கை விரிப்புகள் போன்றவை வெளிநாடுகளில் விற்பனையாகின்றன.
இங்குள்ள சுமார் 700 ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான துணைத் தொழில் நிறுவனங்களால் சுமார் 2.40 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி வரை வணிகம் நடைபெறுகிறது.
தொழில் துறையில் ஒரு முன்னேறிய மாவட்டமாக கரூரை வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதித் தொழில்தான் கொண்டு செல்கிறது. இங்கு தயாரிக்கப்படும் பெரும்பாலான ஜவுளிகள் கழிவுப் பஞ்சிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நூலில் தயாரிக்கப்படுவது சிறப்பம்சம்.
ஜவுளிகளை இறக்குமதி செய்து வந்த மேலைநாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட கோட்டா முறை கைவிடப்பட்டதும், கரூர் ஜவுளி உற்பத்தி சுமார் ரூ.10 ஆயிரம் கோடியாக உயரும் என்று கணக்கிடப்பட்டது.
இதற்காக இந்தத் தொழிலில் ஈடுபட்டோர் தங்களை ஒருங்கிணைத்து பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஆனால், நூல் விலையேற்றத்தால் இலக்கை எட்ட முடியாத நிலையால், தற்போது இந்தத் தொழிலில் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நீடிப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொழிலின் மிக முக்கிய மூலப்பொருளான நூலின் விலை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகிறது.
குறிப்பாக, கரூர் ஜவுளித் தொழிலுக்குத் தேவையானவை எண் 220, எண் 10 நூல் வகைகளாகும். இந்த வகை நூல்களின் விலையேற்றம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக, 5 கிலோ கொண்ட எண் 220 நூலின் விலை இந்த மாதத்தில் ரூ.800-க்கு விற்கிறது. இதே நூல் கடந்த ஜூலையில் ரூ.680-க்கு விற்றது. 10 ஆம் எண் நூலின் விலை ஜூலையில் ரூ.340-க்கும், தற்போது ரூ.400 வரையும் விற்கிறது. இவ்வாறாக நூல், பெட்ரோல், டீசல் விலையேற்றம், தொடர் மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற காரணிகள் இந்தத் தொழிலைப் பாதிக்கின்றன.
தற்போது நிலவும் தொடர் மின்வெட்டால் ஜெனரேட்டரை நாட வேண்டியுள்ளதால் உற்பத்திச் செலவு உயர்கிறது. இதனால், குறிப்பிட்ட விலையில் ஜவுளியை ஏற்றுமதிக்கான ஆர்டரை பெறும் உற்பத்தியாளர்கள், அந்த விலையில் ஜவுளியை வெளிநாட்டிற்கு வழங்க முடியுமா என்று யோசிக்கின்றனர்.
இந்திய ரூபாய்க்கு எதிராக டாலர் மதிப்புச் சரிவால் ஏற்றுமதியாளர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இவ்வாறு பல வகைகளில் தாக்குதலில் சிக்குண்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் நூல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
அதற்கு மூலகாரணமான பருத்தியை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பருத்தி விளையும் நேரத்தில் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் அரசு, பருத்தி அறுவடைக் காலத்தில் தடையை திரும்பப் பெறுகிறது. இதனால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பஞ்சு பாகிஸ்தான்,சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளில் நூலாக்கப்பட்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மீண்டும் இந்தியாவிற்கே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இத்துடன் நமது பஞ்சைப் பயன்படுத்தியே நமக்கு மிகப் பெரிய போட்டியாளராக அந்த நாட்டினர் உருவெடுக்கிறார்கள்.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2008-ல் கைத்தறித் துணி ஏற்றுமதிக்கு 2 சத மானியம் அளிக்கப்படும் என்று அறிவித்தது. இதனால், கரூர் கைத்தறி துணி ஏற்றுமதியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாயினர். இதனால், கரூருக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.8 கோடி வரை மானியமாகக் கிடைக்கும். ஆனால், இந்தத் தொகையை ஏற்றுமதியாளர்களால் தற்போது வரை பெற முடியவில்லை. ஏனெனில், கைத்தறித் துணிக்கென ஓர் உற்பத்தி எண்ணையும், எச்.எஸ் என்ற குறியீட்டையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இந்தக் குறியீட்டை மத்திய சுங்க இலாகாவினர் தங்கள் கணினியில் பதிய வசதியில்லை என்று கூறுவதால் மானியத்தைப் பெற முடியவில்லை.
இந்நிலையில், கைத்தறி துணி ஏற்றுமதிக்கான மானியத்தை மேலும் 2 சதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் ஒன்றும் கிடைத்து விடப்போவதில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் கூறியது:
ஜவுளித்தொழில் தொடர்ந்து சீரான பாதையில் செல்ல, நூல் விலை நிலையாக இருக்க வேண்டும். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கும் ஒரு சில வியாபாரிகள், அதை நூலாக்கி, பதுக்கி வைத்து விலையேற்றுகிறார்கள். அவர்களை இனம்கண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தத் தொழிலுக்கு வழங்கப்படும் சலுகைகள் போதுமானதாக இல்லை. வெளிநாடுகளுடன் போட்டியிடும் வகையில் டாலருக்கு நிகரான நிலையான மதிப்பு வழங்கப்பட வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப சில சலுகைகளையும் வழங்க வேண்டும்.
விவசாயம் அழிந்துவரும் நிலையில் இந்தத் தொழில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே அதிகத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்.
இதை மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டும். கரூர் ஜவுளி உற்பத்தியாளர்களின் நிலையை மத்திய ஜவுளித் துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறுவதற்கு முயன்றால்கூட அவரைச் சந்திப்பதற்கான தேதி வழங்க மறுக்கப்ப்படுகிறது. இத்தகைய நிலையில் தொழிலை நஷ்டத்துக்கு நடத்தும் நிலையில் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர் என்றனர் அவர்கள்.