சிப்ஸ் கலவை தவிர்க்கப்படுமா?
பாபநாசம்,டிச. 23: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை தாற்காலிகமாகச் சீரமைக்க பயன்படுத்தப்படும் சிப்ஸ் எனப்படும் ஒருவகைக் கலவையால் சுற்றுச்சூழல் மாசடைவதாக இப் பகுத
பாபநாசம்,டிச. 23: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை தாற்காலிகமாகச் சீரமைக்க பயன்படுத்தப்படும் சிப்ஸ் எனப்படும் ஒருவகைக் கலவையால் சுற்றுச்சூழல் மாசடைவதாக இப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் பெய்த பலத்த மழையால் பாபநாசம் பகுதிகளிலுள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்தன. குறிப்பாக, தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்தது. இந்தச் சாலையை தாற்காலிகமாகச் சீர்செய்ய கருங்கல் ஜல்லி துகள்களான சிப்ஸ் எனப்படும் ஒருவகைக் கலவை பயன்படுத்தப்பட்டது.
ஆனால், தொடர்ந்து பெய்த மழையால் அக்கலவை கரைந்து சாலைகளில் பரவியது. இதனால், மீண்டும் சாலைகள் குண்டும், குழியுமாகவே உள்ளன.
Advertisement
தற்போது வெயில் அடிப்பதால், சாலைகளில் படிந்துள்ள சிப்ஸ் கலவை வாகனப் போக்குவரத்தின் காரணமாக காற்றில் பரவி இப் பகுதிகளிலுள்ள வீடுகளில் சிமென்ட் துகள்கள் போன்று படிந்துவிடுகின்றன. இதனால், வீட்டு உபயோகப் பொருள்கள், வாகனங்கள் உள்ளிட்டவைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும், இப் பகுதிகளில் வசிப்போருக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் நிலையும் உள்ளது.
இந்தக் கலவையின் தாக்கத்தால் முடி உதிர்தல், உடலில் அரிப்பு உள்ளிட்டவற்றாலும் இப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலைகளில் பரவிக் கிடக்கும் இந்தக் கலவையால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் சாலைச் சீரமைப்புப் பணிகளுக்கு இதுபோன்ற கலவையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு அடையாத வகையிலும், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையிலும் சாலைச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.