முகப்பு
திருச்சி

மங்களூர்-சென்னை ரயில் கரூரில் நிற்கும் நேரம் குறைப்பு

கரூர், ஜூலை 2: மங்களூர்-சென்னை ரயில் கரூரில் நிற்கும் நேரம் குறைக்கப்பட்டதால், கரூர் ரயில் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.   தமிழகம் முழுவதும் சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் சென்னைக்கு வ

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:33 PM
பகிர்:

கரூர், ஜூலை 2: மங்களூர்-சென்னை ரயில் கரூரில் நிற்கும் நேரம் குறைக்கப்பட்டதால், கரூர் ரயில் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

  தமிழகம் முழுவதும் சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் சென்னைக்கு வந்து சேரும் ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த மாற்றம் தமிழகம் முழுவதும் கடந்த 1 ஆம் தேதியும், சில ரயில்களுக்கு ஆக.1 முதலும் அமலுக்கு வருகின்றன.

  இதனால், கரூருக்கு வந்து செல்லும் ரயில்களின் நேரத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மங்களூரிலிருந்து புறப்பட்டு கரூர் வழியாகச் சென்னை எழும்பூருக்குச் செல்லும் வண்டி எண். 6108, கரூருக்கு இரவு 7.45-க்கு வந்து 8.20-க்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சென்னையைச் சென்றடையும். தற்போது மாற்றப்பட்ட நேரத்தின்படி, கரூருக்கு இரவு 7.15-க்கு வந்து சேரும் ரயில் 7.20-க்கு புறப்பட்டுச் செல்கிறது.

  மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு கரூர் வழியாக மங்களூர் செல்லும் வண்டி எண். 6107, காலை 6.40-க்கு கரூருக்கு வந்து 6.50-க்கு புறப்பட்டுச் சென்றது. தற்போது 6.17-க்கு கரூருக்கு வந்து 6.20-க்கு புறப்பட்டுச் செல்லும் வகையில் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஆக.1 முதல் அமலுக்கு வருகிறது.

   அதேநேரத்தில், கரூர் வழியாக சென்னைக்குச் செல்லும் மற்ற ரயில்களின் நேரங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நேர மாற்றம் கரூர் மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

  கரூரிலிருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும் என்பது கரூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. ஆனால், கரூரில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஈரோட்டிலிருந்து சென்னைக்கு கடந்த 2003 ஜூலை 2 ஆம் தேதி ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் கரூருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

  காலப்போக்கில் இந்த இட ஒதுக்கீடும் குறைக்கப்பட்டது. அதன்பின்னர், பல்வேறு கட்சியினர், பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, இட ஒதுக்கீட்டில் பழைய முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

  ஈரோட்டிலிருந்து சென்னைக்குச் சென்ற ரயில் குறுகிய காலத்தில் கோவை-சென்னை ரயிலாக மாறியது. அதைத் தொடர்ந்து, மங்களூர்-சென்னையாக நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு கரூருக்காக விடப்பட்ட இந்த ரயில், அதன் தன்மையை இழந்து விட்டது. தற்போது கரூரில் 5 நிமிஷங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அதேநேரத்தில், திருச்சிக்குச் செல்லும் இந்த ரயில், அங்கே சுமார் 2 மணி நேரம் காத்திருக்கிறது. இதனால் கரூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இதுகுறித்து தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் எச். சாகுல்அமீது கூறியது:

  கரூர்-சென்னை ரயில்விட வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ரயில்தான் ஈரோடு-சென்னை ரயில். அதன்பின்னர் அந்த ரயில் நீட்டிக்கப்பட்டு தற்போது மங்களூர்-சென்னை ரயிலாகச் சென்று கொண்டிருக்கிறது.

  தற்போது மாற்றப்பட்ட நேர மாற்றத்தால், கரூர் மிக அதிக பாதிப்பை சந்திக்கவுள்ளது. தொழில் நகரமான கரூர், மக்கள் தங்களது வேலைகளை முடித்து விட்டு சென்னைக்குச் செல்ல ஏதுவான நேரமாக, இரவு 8.20 மணி இருந்தது. தற்போது சுமார் 5 நிமிஷம் மட்டுமே நிற்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

  இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளிடமும், கோட்ட மூத்த மேலாளர் (இயக்கம்) ரவீந்தரிடமும் பேசினேன். விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

  திருச்சி வழியாகச் சென்னைக்கு பல ரயில்கள் புறப்பட்டுச் செல்லும்போது, மங்களூர்-சென்னை ரயில் ஏன் தேவையில்லாமல் சுமார் 2 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னையில் உரிய தீர்வு காணப்படாவிட்டால், அதிமுக தலைமையிடம் தெரிவித்து போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →