குறுவை சாகுபடி இலக்கு எட்டப்படுமா?
திருவாரூர், ஜூன் 9: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதில் நிலவும் உறுதியற்ற நிலை காரணமாக, குறுவைப் பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சாகுபடி இலக்கு எட்டப்படுவதில் நிச்சய
திருவாரூர், ஜூன் 9: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதில் நிலவும் உறுதியற்ற நிலை காரணமாக, குறுவைப் பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சாகுபடி இலக்கு எட்டப்படுவதில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. வேளாண் துறையும் நிகழாண்டுக்கு ஏறத்தாழ 1.15 லட்சம் ஹெக்டேரில் இச் சாகுபடியை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வழக்கமாக 43,000 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும். இதில் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் தண்ணீர் பெற்று இதுவரை 3,000 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன. மேலும், ஏறத்தாழ 500 ஹெக்டேரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன.
Advertisement
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தின் வழக்கமான குறுவைச் சாகுபடி பரப்பு 36,000 ஹெக்டேர். இதில் இதுவரை 2,600 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிவுற்றுள்ளன. ஏறத்தாழ 100 ஹெக்டேரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பொருத்தவரை, வழக்கமான பரப்பு 36,000 ஹெக்டேர். இதில் இதுவரை 7,000 ஹெக்டேரில் நடவுப் பணிகள் முடிந்துள்ளன. ஏறத்தாழ 1,000 ஹெக்டேரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன.
டெல்டா பகுதியில் வழக்கமாக குறுவைச் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் நிகழாண்டில் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க இயலாத நிலை உள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த மார்ச் மாதத்தில் 74 அடியாக இருந்தது. காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலிருந்து போதிய நீர் வரத்து இல்லாததால், ஓரிரண்டு அடிகளே உயர்ந்து ஜூன் 1 ஆம் தேதி 76 அடியாக இருந்தது. புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம் 79 அடியைத் தொட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாகவே சற்று அதிகரித்து வருகிறது. ஜூன் 12-ல் அணை திறக்காவிடில், டெல்டா மாவட்டங்களில் வழக்கமான சாகுபடி பரப்பான 1.15 லட்சம் ஹெக்டேரில் ஏறத்தாழ 50,000 ஹெக்டேரில்தான் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர் வேளாண் துறையினர்.
ஆழ்குழாய் கிணறுகளை நம்பியே இந்த ஆண்டில் 50 சதப் பரப்புக்கு சாகுபடி மேற்கொள்ளப்பட்டாலும், எங்கும் நிலவும் நிலத்தடி நீர் மட்டம் குறைவு, கடந்த இரு மாதங்களாக மழை பெய்யாமல் நிலவும் கடும் வெப்பம் மற்றும் மின் மோட்டார்களுக்குச் சீராக வழங்கப்படாத மின்சாரம் ஆகியவை காரணமாக, நிகழாண்டில் சாகுபடி பரப்பிலும் நெல் உற்பத்தியிலும் குறைவு ஏற்படும் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்டத் துணைச் செயலர் பி.ஆர். பாண்டியன்.
இந்நிலையில், நிகழாண்டில் வேளாண் துறை நிர்ணயித்துள்ள சாகுபடி இலக்கை எட்ட இயலாது என்பது ஒருபுறம் இருந்தாலும், இதனால் கிடைக்கும் (நெல்) மகசூலான ஏறத்தாழ 6.32 லட்சம் டன்னிலும் மிகப்பெரிய அளவுக்கு உற்பத்திக் குறைவு ஏற்படும் வாய்ப்புள்ளது.