முகப்பு
திருச்சி

ஒற்றை விரலில் 12 மணி நேரம் தட்டைச் சுற்றும் இளைஞர்

திருவாரூர், மே 19: ஒற்றை விரலில் ஒரு கிலோ எடை கொண்ட தட்டை 12 மணி நேரம் சுற்றி லிம்கா சாதனை புத்தகத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் எம். வீரக்குமார். திருவாரூர் மாவ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:54 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:28 PM

திருவாரூர், மே 19: ஒற்றை விரலில் ஒரு கிலோ எடை கொண்ட தட்டை 12 மணி நேரம் சுற்றி லிம்கா சாதனை புத்தகத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் எம். வீரக்குமார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மருதையன். இவரது கடைசி மகன் வீரக்குமார் (29). இயந்திரப் பொறியியல் படிப்பில் பட்டயப் படிப்பு முடித்துள்ளார்.

இவர் பள்ளிப் பருவம் முதலே நோட்டு மற்றும் புத்தகங்களை தனது வலது கை ஆள்காட்டி விரலின் நுனியில் வைத்து சுற்றுவாராம். இதை தனது நண்பர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, அப்போது சில நிமிஷங்கள் வரை சுற்றியுள்ளார்.  இதையே ஒரு சாதனையாக நிகழ்த்த வேண்டும் என விரும்பிய வீரக்குமார், தொடர்ந்து கையில் கிடைக்கும் பொருள்களை தனது விரலில் வைத்து சுற்றிக் கொண்டே பயிற்சி செய்துள்ளார்.

Advertisement

கடந்த 2002-ம் ஆண்டில் தான் படித்த கல்லூரி மற்றும் சில இடங்களில் ஒரு மணி நேரம் தொடர்ந்து விரலில் தட்டை வைத்து சுற்றிக் காட்டிய வீரக்குமாருக்கு சக நண்பர்களும், கிராம மக்களும்  இதில் அவர் சாதனை படைக்க வேண்டும் என ஊக்கமளித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக ஒரு கிலோ எடை கொண்ட தட்டை தொடர்ந்து 5 மணி நேரம் வரை சுற்றினார். தனது ஆள்காட்டி விரலில் தட்டை சுற்றிக் கொண்டிருக்கும்போதே அதே கையில் விரலை மாற்றியும், சுற்றிக் கொண்டிருக்கும் தட்டை உயரே தூக்கிப் போட்டு, மீண்டும் அதே விரலால் பிடித்தும், தட்டின் மீது பந்தை வைத்துச் சுற்றியும் அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகிறார் வீரக்குமார்.

முதலில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டுமென்ற நோக்கில் தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியின் பலனாக ஒரு கிலோ எடை கொண்ட தட்டை தொடர்ந்து 12 மணி நேரம் சுற்றிய வீரக்குமாரின் சாதனையை, தற்போது லிம்கா சாதனை புத்தகம் தேசிய அளவிலான சாதனையாக அங்கீகரித்து, சான்றிதழை அண்மையில் அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து வீரக்குமார் கூறியது:

இளம் வயதிலிருந்தே தொடங்கிய பழக்கம் என்றாலும், கராத்தே மூலம் கற்றுக் கொண்ட மனதை ஒருமுகப்படுத்தும் திறன் ஆகியவற்றாலும் தொடர்ந்து 24 மணி நேரம் தட்டை சுற்றி, கின்னஸில் இடம் பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தின் காரணமாக தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதுபோன்ற சாதனையை வேறு யாரும் இதுவரை செய்யவில்லை. கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையை இடம் பெறச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எனது நண்பர்கள் மூலமாகத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளேன்.

கின்னஸில் இடம் பெற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதை விரைவில் சாதிப்பேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்  வீரக்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.