முகப்பு
திருச்சி

குளமங்கலம் ஐய்யனார் கோயில் சுற்றுலாத் தலமாக்கப்படுமா?

ஆலங்குடி, மே 23: சிறு தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடிமிண்டய்யனார் திருக்கோயிலை (படம்) சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:00 PM
பகிர்:

ஆலங்குடி, மே 23: சிறு தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடிமிண்டய்யனார் திருக்கோயிலை (படம்) சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, திருவேங்கைவாசல், விராலிமலை, பேரையூர், திருக்களம்பூர், திருமயம், ஆவுடையார்கோவில் ஆகிய இடங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களாகத் திகழ்கின்றன. இந்த இடங்களில் சுற்றுலாத் தொழிலை வளர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

  இதேபோல, ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு பெருங்காரையடிமிண்டய்யனார் திருக்கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தானாண்மை நாடாக இருந்த இப்பகுதியõல் பெரிய கோயிலாக இக்கோயில் திகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

  அய்யனார் வழிபாட்டுடன் பிரிக்க முடியாத தொடர்புடைய குதிரை வழிபாடு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு காவல் தெய்வமாக நிறுவப்பட்டுள்ள 33 அடி உயர குதிரைச் சிலையானது, ஆசிய அளவில் பிரசித்தி பெற்றதாகும்.

  இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தொடங்கி நடைபெறும் திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழாவின்போது குதிரைச் சிலைக்கு காகித மாலைகள் அணிக்குப்பட்டு பக்தர்களால் நேர்த்திக் கடன் செலுத்தப்படும். அந்த நாள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

   இந்நிலையில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய இப்பகுதியிலுள்ள அருள்மிகு பெருங்காரையடிமிண்டய்யனார் திருக்கோயிலை அரசு     சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   ஒருங்கிணைந்த சுற்றுலாவாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல், குடுமியான்மலை, நார்த்தாமலை, திருவேங்கைவாசல், விராலிமலை, பேரையூர், திருக்களம்பூர், திருமயம், ஆவுடையார்கோவில் ஆகியவற்றோடு குளமங்கலம் கோயிலையும் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

  சிவன் அல்லது பெருமாள் கோயில்களுக்கு இணையாக சிறு தெய்வ வழிபாட்டுக்கோ காவல் தெய்வங்கள் வழிபாட்டுக்கோ நம் சமூகத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. கிராமப்புற கோயில்களிலுள்ள சிறு தெய்வ வழிபாட்டு மரபுகள் அவை, எவ்வளவு பாரம்பரியமிக்கவையாக இருந்தாலும் புறக்கணிக்கப்படுகின்றன.

   இந்நிலையில், இன்றைய இளையத் தலைமுறையும் வெளிநாட்டு, வெளிமாநிலச் சுற்றுலாப் பயணிகளும் அவ்வளவாக அறிந்திடாத சிறு தெய்வ வழிபாடு குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில்,அரசு ஏன்  இதுபோன்ற கோயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  இது ஒருபுறமிருக்க இந்தக் கோயிலை சுற்றுலாத் தலமாக்குவதன் மூலம் இப்பகுதியின் பொருளாதாரச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிறார் முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலம்.

   இக்கோயிலில் விரைவில் நடைபெறவுள்ள குடமுழுக்குத் திருப்பணிக் குழுத் தலைவரான அவர் இதுகுறித்து கூறியது:

  ""கொடையாளர்களைக் கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் வகையில் பஸ்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கேற்ப சில அடிப்படைக் கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்குவதுடன் இக்கோயிலைச் சுற்றுலாத் தலமாக அரசு அறிவித்தால் நிச்சயம் இக்கோயில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்.

  தவிர, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள இப்பகுதி மக்களின் வாழ்விலும் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். சுற்றுலாத் துறை இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →