முகப்பு
திருச்சி

நீடாமங்கலம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுமா?

நீடாமங்கலம், நவ. 10:  தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து நீடாமங்கலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ரயில் நிலையம் முன்ன

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:41 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:39 PM

நீடாமங்கலம், நவ. 10:  தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து நீடாமங்கலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ரயில் நிலையம் முன்னர் சந்திப்பு (ஜங்ஷன்) என்ற அந்தஸ்தோடு இயங்கியது. பின்னர், மன்னார்குடி - நீடாமங்கலம் ரயில் பாதை முற்றிலும் அகற்றப்பட்ட பிறகு அந்த அந்தஸ்தை இழந்தது.

   ஆயினும், நாகூர் - தஞ்சாவூர் பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்ட காலத்தில் முற்றிலுமாக ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

    தற்போது அகல ரயில் பாதையில் திருச்சி முதல் நாகூர் வரையிலும், நாகூரிலிருந்து திருச்சி வரையிலும் என பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் ரயில் மூலம் நாள்தோறும் நீடாமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது.

    அதோடு மட்டுமன்றி, நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற கம்பன் விரைவு ரயில், எர்ணாகுளம் - நாகூர் விரைவு ரயிலும் பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில் மத்திய ரயில்வே நிலைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு முயற்சியின் பேரில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

   இதன் மூலம் நீடாமங்கலம், மன்னார்குடி, ஆலங்குடி, கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பயனடைந்துள்ளனர்.

    இந்த ரயில் போக்குவரத்தால், நீடாமங்கலத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும், மற்றும் நாகூர் - வேளாங்கன்னி செல்லும் பக்தர்களும் பெரும் பயனடைகின்றனர்.

    தற்போது நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரியின் அலுவலகமும், முன்பதிவு மையமும் ஒரே அறையில் இயங்குகின்றன. ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் கிராசிங் ஆகும் நேரங்களில் நிலையத்தில் ரயில் இரண்டாவது, மூன்றாவது நடைமேடையில் நின்றால் பயணிகள் சிரமமின்றி ஏறி இறங்கிச் செல்ல நடைமேடையை உயர்த்தி அமைக்க வேண்டும். மேலும், இரண்டு, மூன்றாம் நடைமேடைகளில் பயணிகள் அமரக்கூடிய நிழல் குடைகள் சிறிய அளவில் மட்டுமே உள்ளன.

   இவற்றைப் பெரிதாக அமைக்க வேண்டும். மின்சாரம் இல்லாத சமயங்களில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

   நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு நுழைவுப் பாதை இல்லாமல் உள்ளது. நிலையத்தின் அருகே நேரு குழந்தைகள் பூங்காவின் பின்புறம் உள்ள ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் நீடாமங்கலம் சந்திப்பு என்ற அலங்கார வளைவுடன் கூடிய ரயில் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளுடன் கூடிய கட்டடம் ஒன்றும் கட்ட வேண்டும்.

   ரயில் நிலையப் பகுதியை திறந்தவெளிக் கழிப்பிடமாக அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதனால், சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது.

    ரயில் வரும் நேரத்தில் மட்டுமே தற்போது நிலையத்தில் உள்ள கழிவறைகள் திறக்கப்படுகின்றன. இதனால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு எந்தப் பயனும் இல்லை.

   மேலும், இரவு நேரங்களில் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியை திறந்தவெளி மதுபானக் கூடமாகப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.       

    இவ்வாறு அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி, ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு நீடாமங்கலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த  தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.