திருச்சி

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிட தமிழக எம்.பி.க்கள் முயற்சிப்பார்களா?

தஞ்சாவூர், நவ. 14: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நிகழ் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தமிழக எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறத

ஆர்.​ ​ தங்கராஜு

தஞ்சாவூர், நவ. 14: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நிகழ் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தமிழக எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறுவை, சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை வலியுறுத்துவது, தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் தமிழக அரசை வலியுறுத்துவது, இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது, கர்நாடகம், மத்திய அரசிடம் தொலைபேசியில் பேசுவது போன்றவை வழக்கமான நிகழ்வுகளாகிவிட்டன.

    ஆண்டுதோறும் காவிரியில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது.

    அந்தத் தீர்ப்பில், கர்நாடகம் தமிழகத்துக்கு விகிதாசார அடிப்படையில் மாதந்தோறும் குறிப்பிட்ட டிஎம்சி அளவு தண்ணீரை வழங்க வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தவும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்குவதைக் கண்காணிக்கவும் "காவிரி நிர்வாக வாரியம்' என்ற அமைப்பை ஏற்படுத்தவும் மத்திய அரசுக்கு காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

   முழு நேரமும் செயல்படக் கூடிய அதிகாரம் படைத்த இந்த வாரியத்துக்கு தலைவர், இரண்டு உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டுமென்றும், இந்த நிர்வாகிகள் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்கலாம் என்றும், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி சார்பில் தலா ஒரு பகுதி நேர உறுப்பினரை (நீர்ப் பாசனப் பொறியாளராக இருக்க வேண்டும்) நியமிக்கலாம் என்றும், "காவிரி ஒழுங்குமுறை கமிட்டி' என்ற அமைப்பை "காவிரி நிர்வாக வாரியம்' ஏற்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

    வாரியத்தின் அறிவுரைப்படி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒழுங்குமுறை கமிட்டியின் பணியாகும். அதன்படி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணாராஜசாகர், கபினி, மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் நாள்தோறும் நீர்வரத்தைத் திரட்டுதல், மாதாந்திர அடிப்படையிலான நீர் விடுவிக்கும் அளவைக் கண்காணித்தல், கர்நாடக- தமிழக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு நீர் அளவை மையத்தில் நாள்தோறும் திறந்துவிடப்படும் நீரின் அளவைக் கண்காணித்து வாரியத்துக்கு தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளை ஒழுங்குமுறை கமிட்டி மேற்கொள்ள வேண்டும்.

    வாரியத்தைப் பொருத்தவரை, நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்ட விகிதாசார அடிப்படையில், இருப்பில் உள்ள தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்து வாரியம் முடிவு செய்யும்.

    தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றில் ஏதாவது ஒரு மாநிலம் நடுவர் மன்ற உத்தரவை நிறைவேற்ற ஒத்துழைக்காவிடில், மத்திய அரசின் உதவியை நாடலாம் என்றும், தண்ணீர் திறந்துவிடுவதில் ஏதாவது ஒரு மாநிலம் தாமதம் செய்தால் அல்லது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகக் குறைவாக விடுவித்தால், அடுத்த மாதத்தில் சம்பந்தப்பட்ட மாநிலத்துக்குரிய தண்ணீரின் பங்கை வழங்க வேண்டும் என்றும் இறுதித் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கர்நாடக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவினாலும், காவிரி பிரச்னையில் அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து குரலெழுப்புகின்றன. ஆனால், தமிழகத்தில் இந்த நிலைமை இல்லை.

    காவிரியில் இறுதித் தீர்ப்பை அமல்படுத்தவோ அல்லது காவிரி நிர்வாக வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தவோ தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களோ, மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் திமுக எம்பிக்களோ குரல் கொடுக்கத் தயங்குகின்றனர்.

    காவிரி பிரச்னையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் மென்மையான அணுகுமுறை அவரது அறிக்கைகள் மூலம் தெளிவாகிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

    மேலும், இறுதித் தீர்ப்பு அமலுக்கு வரும் வரை, இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைக்கூட முழுமையாகப் பெறவும், குறித்த காலத்தில் மேட்டூர் அணையைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ஆனாலும், காவிரியில் தமிழக உரிமையை மீட்டுக் கொடுக்கும் பொறுப்பிலுள்ள முதல்வர் கருணாநிதி, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    காவிரி பிரச்னையில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் என்றும், குறித்த காலக்கெடுவுக்குள் நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் அமல்படுத்தாவிடில், அரசாணை வெளியிடப்படும் என்றும் 7.2.2007 அன்று சென்னை வந்த அப்போதைய மத்திய நீர் வளத் துறை அமைச்சர் சைபுதின் சோஸ் தெரிவித்திருந்தார். ஆனால், இன்றுவரை ஆணையமும் அமைக்கப்படவில்லை; அரசாணையும் வெளியிடவில்லை.

    கர்நாடகத்திடமிருந்து தமிழகம் பெற வேண்டிய உரிமைகளை நீதித் துறை முடிவு செய்த போதும், அதன் பயனை நாம் அனுபவிக்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.

    காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்துக்கு இணையாக வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்காத கர்நாடக அரசு, சட்டத்தையும், அரசியல் சாசனத்தையும் மதிக்கவில்லை என்று கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. தீர்ப்பு குறித்து தமிழ்நாடு, கர்நாடக அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், காவிரி நிர்வாக வாரியம் அமைப்பது தடைபட்டு வருகிறது.

   மத்திய அரசு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால், கர்நாடகம் அந்தத் தீர்ப்பை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். எனவே, தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பிரச்னை குறித்து நிகழ் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும். இல்லையெனில், இந்த உத்தரவு ஏட்டளவில் மட்டுமே இருக்கும் என்று காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் சுட்டிக்காட்டியது உண்மையாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT