முகப்பு
திருச்சி

அய்யம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகம் மேம்படுத்தப்படுமா?

பாபநாசம்,செப். 30: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை நகரில் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகத்தை மேம்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  பாபநாசம் வட்டம், பாபநாசம், அ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:26 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:13 PM

பாபநாசம்,செப். 30: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை நகரில் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகத்தை மேம்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 பாபநாசம் வட்டம், பாபநாசம், அம்மாபேட்டை என இரு ஒன்றியங்களையும், பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூர், சாலியமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பேரூராட்சிகளையும், சுமார் 78 ஊராட்சிகளையும் கொண்ட வட்டமாக விளங்குகிறது.

 இப் பகுதி மக்கள் நிலங்களை விற்க, வாங்க, பெயர் மாற்றம், திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பாபநாசம் சார்பதிவாளர் அலுவலகத்தையே அணுக வேண்டியிருந்தது.

Advertisement

 இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களையும், கால விரயத்தையும் கருத்தில் கொண்டு, இங்கு மேலும் ஒரு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட வேண்டுமென பொதுமக்கள், வர்த்தகர்கள் விடுத்த கோரிக்கையைடுத்து, அய்யம்பேட்டை பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

 இதையடுத்து, அய்யம்பேட்டை கடைவீதி முக்கிய சாலையில், வாடகைக் கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு, சுமார் ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது.

 இருப்பினும், இந்த அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்கள் பற்றாக்குறையால் அண்மைக் காலமாக அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆவண எழுத்தர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

 அலுவலகத்தில் அண்மையில் கணினி அமைக்கப்பட்டும், அதனை இயக்குவதற்கான ஊழியர் நியமிக்கப்படாததால், கணினி சேவையையும் பயனாளிகள் பெறமுடியாத நிலை உள்ளது. மேலும், அய்யம்பேட்டையில் முத்திரைத்தாள் போதுமான அளவில் கிடைப்பதில்லை. முத்திரைத்தாள் வாங்குவதற்காக பாபநாசம், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

 இதனால், பொதுமக்களுக்கு கால விரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் அய்யம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு போதிய பணியாளர்களை நியமித்தும், முத்திரைத் தாள் போதுமான அளவு விற்பனை செய்வதற்கு ஆள்களை நியமித்து, அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

 இதுகுறித்து பாபநாசம் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு ஒன்றியச் செயலர் அ.சி. பன்னீர் செல்வம் கூறியது:

 அய்யம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், அய்யம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

 இருப்பினும், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. கணினி இயக்குபவர் பணியிடமும் நிரப்பப்படவில்லை. முத்திரைத்தாள் பற்றாக்குறையும் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

 இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

 எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அய்யம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு போதிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

 இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதமானால் நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், பொதுமக்களுடன் இணைந்து அய்யம்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.