முகப்பு
திருச்சி

தேவையை நிரப்புமா புதிய ஆட்சியர் அலுவலக வளாகம்?

திருச்சி, செப். 8:   | 12.01 கோடியில் கட்டப்பட்டு புதன்கிழமை முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சியின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளுள் ஒன்று.

Updated On : 20 செப்டம்பர், 2012 at 10:57 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 10:56 PM

திருச்சி, செப். 8:   | 12.01 கோடியில் கட்டப்பட்டு புதன்கிழமை முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சியின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளுள் ஒன்று. ஆனால், தற்போதைய தேவைகளுக்கு முழுமையானதாக இந்த வளாகம் அமையுமா என்ற கேள்வி இப்போதும் எழுகிறது.

   மாநிலத்தின் மைய மாவட்டம் என்ற பெயர் பழைமையான ஒன்றாக இருந்து வந்தபோதிலும், இப்போதுதான் திருச்சி மாவட்டம் பெயருக்குரிய வளர்ச்சிகளுள் ஒன்றை நிறைவு செய்திருக்கிறதாகத் தெரிகிறது.

   அதற்குக் காரணம், திருச்சியைச் சுற்றியுள்ள சிறிய மாவட்டங்களும் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை சில- பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டன.  குறிப்பாக, திருச்சியிலிருந்து அண்மையில் பிரிந்த மாவட்டங்களிலும் வசதியான,விசாலமான ஒருங்கிணைந்த வளாகங்கள் ஏற்கெனவே பிரம்மாண்டமாக எழுந்து நிற்கத் தொடங்கிவிட்டன.   திருச்சி பெரிய மிளகுப்பாறையில் தற்போது கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்துக்கு பின்புறம், மிகப்பழைய காலக் கட்டடங்களில் ஆதிதிராவிடர் நலத் துறை, அறிவொளி இயக்கம், கருவூலத் துறை போன்ற அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

   1995-ல் கட்டப்பட்ட புதிய வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறை, மாவட்ட வருவாய் அலுவலரின் அறை, கூட்ட அரங்குகளும் செயல்பட்டு வருகின்றன.

   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கட்டடம் அதன்பிறகு கட்டப்பட்டது. அப்போதும் தேவைக்கேற்ற இடவசதி குறித்த கேள்வி பிரதானமாக எழுந்தது.

   பெரும்பாலான அரசுத் துறை அலுவலகங்கள் மாநகரின் பல பகுதிகளில் தனியார் கட்டடங்களில் இப்போதும் செயல்பட்டு வருகின்றன. வேளாண் துறை (பல பிரிவுகள்) அலுவலகங்கள், வனத் துறை அலுவலகங்கள், பொதுப் பணித் துறையில் பல அலுவலகங்கள், காவல் துறையில் சில அலுவலகங்கள், உள்ளூர் திட்டக் குழும அலுவலகம், தேர்வுத் துறை துணை இயக்குநர் அலுவலகம், ஆவணக் காப்பகம், புள்ளியியல் துறை அலுவலகம், நுகர்வோர் குறைதீர் மன்றம், வேலைவாய்ப்புத் துறை அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்கள், தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் இவையெல்லாமும் காஜாநகர், மன்னார்புரம் பகுதிகளில் தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.

   இதுதொடர்பான செய்தி "தினமணி'யில் 2006, நவம்பர் 9-ம் தேதி "ஆண்டுக்கு | 1 கோடி வாடகை செலுத்தும் அரசு அலுவலகங்கள்' என்ற தலைப்பில் வெளியானது.

   அதன்பிறகு ஒவ்வொரு முறையும் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த செய்திக் கட்டுரைகளில் தவறாமல் இடம்பெற்ற ஒன்றுதான் இப்போது திறக்கப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.

   2009-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாகம் அமைப்பதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மின் வாரிய அலுவலகம், புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக அலுவலகம் ஆகியவை இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று புதிய ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

  தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலக வளாகம்- குறிப்பிடத்தக்க, முக்கியமான அம்சம்தான் என்றாலும், திருச்சி மாவட்டத்தின் தேவையை நிரப்பும் அளவுக்கு இந்தப் புதிய வளாகம் இருக்குமா? என்ற கேள்வி இப்போதும் எழுந்திருக்கிறது.

  வருவாய்த் துறையிலுள்ள பல்வேறு பிரிவுகள், அலுவலகங்களுக்கே இந்த வளாகம் சரியாக இருக்கும் எனத் தெரிகிறது. மாநகரின் பல பகுதிகளில் தனியார் கட்டடங்களில் வாடகை கொடுத்து செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களில் பெரும்பாலானவை அப்படியே, அதே இடங்களில்தான் செயல்படும் என ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   எனவே, ஆண்டுக்கு | 1 கோடிக்கு வாடகை செலுத்துவது இன்னும் தொடரத்தான் போகிறது என்கின்றனர் அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர். புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில்- பழையவைகளாகிவிட்ட கட்டடங்களை இடித்துவிட்டு தேவைக்கேற்ற "பெருந்திட்ட வளாகத்தை' அரசு அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.